Skip to main content

அதானி குறித்து ராகுல் காந்தியின் கேள்விகளும் மோடியின் மவுனமும்!

Published on 15/02/2023 | Edited on 15/02/2023

 - வத்திராயிருப்பு  தெ.சு.கவுதமன்

 

Rahul Gandhi's questions about Adani and Modi's silence!

 

ஆசியாவின் நம்பர் ஒன் தொழிலதிபராக இருந்த கவுதம் அதானி நிறுவனங்களின் செயல்பாடுகளில் இருக்கும் வரி ஏய்ப்பு, ஹவாலா மோசடிகள் குறித்து ஆதாரங்களுடன் ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. அதில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்துக்கும் அதானி குழுமத்தால் சரியான பதிலளிக்க முடியவில்லை. இந்நிலையில் அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்கவில்லை. அதானி குழும மோசடிகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியதற்கு பிரதமரோ, காங்கிரஸ் ஆட்சியைக் குறை சொல்லி... நக்கலடித்ததோடு பதில் தராமல் மழுப்பிவிட்டார். அதானி என்ற வார்த்தையைக் கூட பிரதமர் உச்சரிக்கவில்லை!

 

இந்நிலையில், ராகுல் காந்தி எழுப்பிய 5 கேள்விகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. பிரதமர் மோடி ஊழலுக்கு எதிரானவர் என்றால், எந்தவித மழுப்பலும் இல்லாமல் அக்கேள்விகளுக்குப் பதில் தந்திருக்கலாம். அந்த கேள்விகள் இதோ...

 

கவுதம் அதானியுடன் பிரதமர் மோடி எத்தனை முறை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்?

 

கடந்த 8 ஆண்டு கால பாஜக ஆட்சியில், பிரதமர் வெளிநாடுகளுக்கு சென்ற பிறகு அவரை எத்தனை முறை அதானி சந்தித்துள்ளார்?

 

பிரதமர் ஒரு நாட்டிற்கு சென்ற பிறகு, உடனடியாக அதே நாட்டிற்கு அதானியும் சென்றது குறித்த விவரங்கள் தர முடியுமா?

 

பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களுக்குப் பிறகு அதானி நிறுவனம் மேற்கொண்ட ஒப்பந்தங்களின் விவரங்கள் என்ன?

 

கடந்த 20 ஆண்டுகளில் அதானியும் அவரது குழுமத்தினரும் பாஜகவுக்கு அளித்த நிதி எவ்வளவு?

 

Rahul Gandhi's questions about Adani and Modi's silence!

 

ராகுல் காந்தியின் கேள்விகள் மிகவும் எளிமையானவை. சாமானிய இந்தியர்களுக்கும் எழக்கூடிய கேள்விகள் தான். இந்த கேள்விகளுக்கான விடையை ஒன்றிய அரசு வெளிப்படையாக அறிவித்தால், அதானிக்கு ஒன்றிய அரசு செய்து தந்துள்ள சலுகைகள் அனைத்தும் வெட்டவெளிச்சமாகும். ஏன் அதானி குறித்து பேசாமல் பிரமரும் நிதி அமைச்சரும் மவுனம் சாதிக்கிறார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

 

இந்தியாவில் லட்சக்கணக்கான தொழில் நிறுவனங்கள் இருந்தபோதிலும், குறிப்பிட்ட இரண்டு தொழிலதிபர்களுக்கு மட்டும் (அதானி, அம்பானி) தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொடுப்பது, வங்கிக் கடன்களைத் தரச் செய்வது, வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வைப்பது, சட்டதிட்டங்களில்  வரிச் சலுகைகளைக் கொண்டு வருவதென பல்வேறு வழிகளில் இவ்விரு நிறுவனங்களையும் வளர்த்தெடுத்து, அதன் பிரதிபலனாக அவர்களிடமிருந்து கட்சியின் வளர்ச்சிக்கான நிதிகளைக் கோடிக்கணக்கில் பெறுகிறார்கள். இது குறித்து தான் ராகுல் காந்தி கேள்வி எழுப்புகிறார்.

 

குறிப்பாக, அதானி குழுமமானது கடந்த 2014 முதல் 2022க்குள் 8 பில்லியன் டாலரிலிருந்து 140 பில்லியன் டாலராக பிரம்மாண்ட வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதற்கு மோடி அரசின் முழு ஒத்துழைப்பும், நெளிவுசுளிவுகளும் தான் முக்கிய காரணம். இதைத்தான் ராகுல் காந்தி மக்கள் சபையான பாராளுமன்றத்தில் கேள்விக்குள்ளாக்கினார். மோடி ஆட்சியின் முதல் 4 ஆண்டுகளில் மட்டுமே அதானி மற்றும் அம்பானி குழுமங்களுக்காக 16 நாடுகளில் 18 ஒப்பந்தங்களை முடித்துக் கொடுத்தார் மோடி!

 

அதானி, அம்பானி நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல், மலேசியா, ஓமன், பங்களாதேஷ், ஸ்வீடன், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளோடு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இந்த நாடுகளில் மோடி கடுமையாக எதிர்ப்பதாகக் காட்டிக்கொள்ளும் சீனாவும் பாகிஸ்தானும் கூட அடக்கம்! அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் அதானி பவர் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சீனாவைச் சேர்ந்த சீன டெவலப்மென்ட் வங்கி நிதியுதவி அளிக்க ஒப்பந்தம் போடப்பட்டது. முந்த்ராவிலுள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஒளி மின்னழுத்த உபகரணங்கள் தயாரிப்புக்காக சீனாவின் கோல்டன் கன்கார்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது! அதேபோல், பாகிஸ்தானின் மின் உற்பத்திக்கான தேவைக்கு அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் 2015 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் போட்டிருந்தது!

 

பிரான்ஸ் நாட்டின் ரஃபேல் விமானம் வாங்கக்கூடிய ஒப்பந்தத்தில், அனில் அம்பானியால் புதிதாகத் தொடங்கப்பட்ட  ரிலையன்ஸ் டிஃபென்ஸ் இணைக்கப்பட்டது. அதேபோல், ஸ்வீடனின் பாதுகாப்பு நிறுவனமான சாப் ஏபியுடன் இந்தியக் கடற்படையின் ஆளில்லா வான்வழி வாகனம் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை போட்டது. அதேபோல், அதானி குழுமத்துக்காக ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கத்தைக் கைப்பற்ற ஒப்பந்தம் போடப்பட்டது. அதற்கு எஸ்.பி.ஐ. வங்கி பெருமளவு நிதியுதவி அளித்தது. அந்த சுரங்கத்தால் ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக ஆஸ்திரேலிய மக்களே எதிர்ப்பு தெரிவித்தபோதும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இப்படியாக அதானிக்காக ஒன்றிய அரசு செய்து தந்த ஒப்பந்தங்களை பெரிய பட்டியலாகவே கொடுக்கலாம். மோசடியான உத்திகளால் முன்னேறும் ஒரு நிறுவனத்துக்கு நாட்டின் பிரதமரே இப்படி ஒத்துழைப்பதைத்தான் ராகுல் காந்தி, பொறுப்பான எதிர்க்கட்சியாகக் கேள்வி கேட்கிறார். மவுனம் கலைப்பாரா மோடி?

 

 

சார்ந்த செய்திகள்