Rahul Gandhi says The Women's Reservation Bill is incomplete

Advertisment

புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ‘நாரி சக்தி வந்தன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவின்படி இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த இட ஒதுக்கீட்டுச் சட்டம் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றி, இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு, நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன் பிறகு, மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த சட்டம் அமலுக்கு வரும் என அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் அமலுக்கு வராது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நேற்று (20-09-23) தொடங்கி நடைபெற்றது.

இந்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “பெண்களுக்கு அளிக்கப்படும் 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவிற்கு நான் ஆதரவு அளிக்கிறேன். ஆனால், இதர பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள் ஒதுக்கீடு இல்லாமல் இருப்பதால் இந்த மசோதா முழுமையடையாமல் இருக்கிறது. மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற எதற்காக 8 ஆண்டுகள் தேவைப்படுகிறது?அதனால் இந்த மசோதாவை உடனடியாக நிறைவேற்றி நடைமுறைக்கு கொண்டு வாருங்கள்.

Advertisment

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை செய்த பிறகு தான் இந்த மசோதா நடைமுறைக்கு வரும் என்று கூறுவது ஏற்கத்தக்கதல்ல. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் ஓ.பி.சி பிரிவினருக்கான ஒதுக்கீட்டையும் சேர்க்க வேண்டும். அதுபோல், புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்முவை அழைத்திருக்க வேண்டும்” என்று கூறினார்.