கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே அமைந்துள்ள சிக்கபல்லாபூர் பகுதியில், கல்குவாரி ஒன்றில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் சிக்கி, 6 பேர் உயிரிழந்தனர். ஜெலட்டின் குச்சிகள் வெடித்தன் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து அறிந்ததும் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார்.
இந்தச் சம்பவம் குறித்து பேசிய அவர், “வெடித்தவை சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட வெடிபொருட்கள். இந்தச் சம்பவம் சட்டத்தின் மூலம் கையாளப்படும். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். இந்தக் கல்குவாரியில், ஏற்கனவே சட்ட விரோதமாக வெடிபொருட்களைப் பதுக்கியதற்காக, காவல்துறை சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்தச் சம்பவத்திற்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "கர்நாடகாவின் சிக்கபல்லாபூரில் நடந்த விபத்தால் உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து வேதனையடைந்தேன். துயரமடைந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.