Skip to main content

'புதுச்சேரியில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு' - துணைநிலை ஆளுநர் அறிவிப்பு!

Published on 19/04/2021 | Edited on 19/04/2021

 

puducherry night curfew imposed coronavirus prevention

 

புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், அம்மாநில துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். 

 

puducherry night curfew imposed coronavirus prevention

 

அந்த வகையில், இன்று (19/04/2021) புதுச்சேரி துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் ராஜ்நிவாஸில் உயர் மட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு கட்டாயம் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்ற கரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது பற்றியும், கட்டுப்பாடுகள் குறித்தும், மானிய விலையில் முகக்கவசம், சானிடைசர் விநியோகிப்பது பற்றியும் துணைநிலை ஆளுநர் ஆலோசனை நடத்தினார். 

 

puducherry night curfew imposed coronavirus prevention

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், பல்வேறு துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். 

 

puducherry night curfew imposed coronavirus prevention

 

இந்த நிலையில், புதுச்சேரி முழுவதும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பில், "புதுச்சேரியில் நாளை (20/04/2021) முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இரவு 10.00 மணி முதல் அதிகாலை 05.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். உணவகங்களில் இரவு 08.00 மணி வரை மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படும். காலை 05.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மட்டுமே கடற்கரைக்குச் செல்ல அனுமதி அளிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

தமிழகத்திலும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், புதுச்சேரியிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.