
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட தவளக்குப்பம் என்ற பகுதியில் அமைந்துள்ளது தாளம்பாளையம். இந்த பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 6 வயது சிறுமி ஒருவருக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து சிறுமியின் உறவினர்களும் பெற்றோர்களும் பள்ளியை முற்றுகையிட்டனர். அதோடு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது புகார் கொடுத்தும் வழக்குப்பதிவும் செய்யப்படவில்லை, இது தொடர்பாக விசாரணை நடத்தி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, பள்ளியின் உரிமையாளர் அரசியல் கட்சிக்கு நெருக்கமாக இருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் காவல் துறையினர் அலட்சியம் காட்டுகின்றனர் எனச் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இத்தகைய சூழலில் தான் தனியார் பள்ளியில் புகுந்து பொதுமக்கள் மற்றும் சிறுமியின் உறவினர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து உடனடியாக அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் சம்பந்தப்பட்ட பள்ளியை சீலிட்டு மூட உத்தரவிட்டார். இதில் சம்பந்தப்பட்ட ஆசிரியரும் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பள்ளியை மூடி சீல் வைக்க உத்தரவிட்டுள்ளோம். பள்ளி நிர்வாகம் மீது சரியான நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இது போன்ற சம்பவம் மீண்டும் புதுச்சேரியில் நடக்காமல் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பிலும் அரசின் சார்பிலும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்திருந்தார். இத்தகையச் சூழலில் தான் புதுவையில் உள்ள ஒட்டுமொத்த மீனவ கிராமங்களும் ஒன்று திரண்டு இந்த சம்பவத்தைக் கண்டித்து நேற்று முன்தினம் (15.02.2025) போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 18 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றி அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பித்தனர்.
அதில், “பதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்க வேண்டும். புதுவையில் இந்த சிறுமிக்கு ஏற்பட்ட கொடூரம் போன்று மற்ற சிறுமிகளுக்கு ஏற்படக்கூடாது. அதற்கான சட்ட திட்டங்களைப் புதுவை மாநில அரசு கொண்டுவர வேண்டும். பள்ளி நிர்வாகத்தினர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். இது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்கவிட்டால் புதுச்சேரி முழுவதும் போராட்டம் நடத்துவோம்” எனக் கிராம மக்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி தவளக்குப்பம் பகுதியில் கடலூர் - புதுவை சாலையில் மாணவ - மாணவிகள் பள்ளிச் சீருடையில் சாலை மறியல் போராட்டம் ஈடுபட்டனர். மாணவர்களுடன் அவர்களுடைய பெற்றோர்களும், மீனவ கிராம மக்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “பாதிக்கப்பட்ட சிறுமி புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த புகாரை மறைக்கும் முயற்சியில் பள்ளி நிர்வாகம் ஈடுபட்டது. எனவே பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு உடந்தையாகச் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.