Private Power Sector; Employees struggle

யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதுவை மாநிலத்தில் அரசின் மின்துறையை தனியார் மயமாக்கும் பூர்வாங்க நடவடிக்கைகளை கடந்த ஆட்சி காலத்திலேயே மத்திய அரசு தொடங்கியது. இதை கண்டித்து புதுவை மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் இணைந்து தனியார் மய எதிர்ப்பு போராட்டக்குழுவை உருவாக்கி போராட்டம் நடத்த தொடங்கினர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கடந்த அமைச்சரவை கூட்டத்தில் மின்துறையை தனியார் மயமாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து தனியார்மயம் தொடர்பான வரைவு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.

Advertisment

இதையடுத்து பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்தத்தை கடந்த பிப்ரவரியில் தொடங்கினர். தொழிற்சங்கத்தினரிடம் கலந்து ஆலோசிக்காமல் எவ்வித முடிவும் எடுக்கமாட்டோம் என்ற முதல்வர் ரங்கசாமியின் வாக்குறுதி ஏற்று வேலை நிறுத்தத்தை திரும்ப பெற்றனர்.

Advertisment

இந்நிலையில் மின்துறை தனியார் மயத்துக்கான டெண்டர் நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. மின்துறை டெண்டரில், "புதுச்சேரி அரசு மின்துறைக்கான ஏலத்துக்கு ஆர்வமுள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். விநியோகத்தில் நூறு சதவீத பங்குகளை வாங்க ஏலதாரர் தேர்வு செய்யப்படுவார்கள். முன்மொழிவுக்கான கோரிக்கைக்கு ஏலதாரர்கள் ரூ. 5.90 லட்சம் செலுத்தவேண்டும். வங்கி செக்யூரிட்டியாக ரூ. 27 கோடி இருக்க வேண்டும். மின் விநியோகம், சில்லறைவிநியோகம், மற்றும் விநியோகம் செய்யும் பொறுப்பு நிறுவனம் ஆகியவற்றுக்கு புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு தரப்படும். முன்மொழிவுக்கான கோரிக்கை வரும் 30-ஆம் தேதி தொடங்கும். விண்ணப்பிக்க வரும் நவம்பர் 25-ஆம் தேதி இறுதிநாள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதையடுத்து புதுச்சேரி மின் துறை பொறியாளர்கள், ஊழியர்கள், தொழிலாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி மின் துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

Advertisment

இதுபற்றி மின்துறை பொறியாளர் - தொழிலாளர் தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு பொதுச்செயலாளர் வேல்முருகன் கூறுகையில், "மின்துறை தனியார்மயத்துக்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதனால் நேற்று காலை 9 மணிக்கு தலைமை அலுவலகத்தில் அனைத்து பொறியாளர்களும், தொழிலாளர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் துவக்குகிறோம்" என்று தெரிவித்தார்.