/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/viruthunagar-ni_0.jpg)
விருதுநகர் அருகே உள்ள முத்துசாமிபுரத்தில் விஜய் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்துள்ளது. இந்த நிலையில், இன்று (17-02-24) வழக்கம் போல பட்டாசு ஆலையில் வேலைகள் நடந்து வந்த நிலையில், மதியம் 12 மணியளவில் திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் கிட்டத்தட்ட 30 பேர் அங்கு பணியாற்றியதாகக் கூறப்பட்டது.
இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 7 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் தீயை அணைத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசுக்கு மருந்து கலக்கும்போது ஏற்பட்ட உராய்வின் மூலம் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். அதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத்தலா ரூ. 10 லட்சம் என்றும்படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் நடந்த அசம்பாவிதம் குறித்து மிகுந்த வேதனையுடன் அறிந்தேன். இந்த இக்கட்டான நேரத்தில், என் எண்ணங்கள் சோகமாக இறந்தவர்களின் அன்புக்குரியவர்களுடன் உள்ளன. காயமடைந்த அனைவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன். மேலும், விபத்தில் உயிரிழந்த குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 பிரதமர் நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும்’ என்று அறிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)