Skip to main content

சர்ச்சையில் பிரசாந்த் கிஷோர்... விசாரணைக்கு திட்டமிடும் மத்திய அரசு..?

Published on 25/04/2020 | Edited on 25/04/2020


தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் சரக்கு விமானம் மூலமாக டெல்லியிலிருந்து கொல்கத்தாவிற்குப் பயணம் மேற்கொண்டதாகச் செய்திகள் வெளியான நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

prashant kishor cargo plane travel to west bengal

 

 

 

 

கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், டெல்லியிலிருந்து ஐபேக் அமைப்பின் தலைவரான பிரசாந்த் கிஷோர் சரக்கு விமானம் மூலம் கொல்கத்தா சென்றதாகச் செய்திகள் வெளியாகின. கரோனா வைரஸை எதிர்கொள்ளும் விவகாரத்தில் மேற்குவங்க அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கைத் தீர்த்துவைப்பதற்காக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு உதவி செய்ய அவர் கொல்கத்தா சென்றதாகக் கூறப்படுகிறது.

நாடு முழுவதும் விமானச் சேவைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், சரக்கு விமானம் மூலமாக அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டதாகக் கூறப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்தத் தகவல்களை பிரசாந்த் கிஷோர் தரப்பு மறுத்துள்ள நிலையில்,  இதுகுறித்து விசாரணை நடத்த மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிதிஷ்குமாரின் முடிவு; பிரசாந்த் கிஷோரின் கணிப்பு - பரபரப்பான தேர்தல் களம்

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
 Prashant Kishor Prediction on Nitish Kumar Politics

பீகார் மாநிலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால் அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிதிஷ்குமார், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளடங்கிய மகா கூட்டணியை அமைத்து மீண்டும் நிதிஷ்குமார் முதல்வராகப் பதவி வகித்து வந்தார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில்தான் கடந்த 28 ஆம் தேதி நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, மகா கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர் அன்று மாலையே பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் பீகார் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சேர்த்து பாஜகவை சேர்ந்த சாம்ராட் சௌதிரி, விஜய் சின்ஹா இருவரும் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்கள். 

இதனிடையே பாஜகவை வீழ்த்துவதற்காக நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கினார் நிதிஷ்குமார். இந்தியா கூட்டணி தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவைகளை பற்றி ஆலோசித்து வரும் நிலையில், நிதிஷ்குமார் தற்போது அதில் இருந்து பாஜக தலைமையில் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்திருப்பது தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் நிதிஷ்குமாரின் முடிவு குறித்து தேர்தல் வீயூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், “2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் வரைகூட இந்த புதிய கூட்டணி நீடிக்காது. இதனை நான் உங்களுக்கு எழுதி தருகிறேன். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த 6 மாதங்களில் இந்தக் கூட்டணியில் மீண்டும் மாற்றம் நடக்கும். இதனைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். என்னுடைய கணிப்புப்படி சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தால் 20 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறமுடியாது. அப்படி வெற்றிபெற்றுவிட்டால், நான் இதிலிருந்து ஓய்வு பெறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.