/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/993-ashok_158.jpg)
மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்குப் பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து கடந்த மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்தக்கலவரத்தில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகினார்கள். மேலும், 60,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.
இதற்கிடையில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர்கள் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அதே சமயம், அந்த மாநிலத்தில் வன்முறை குறைகிறது என்று மாநில அரசு அவ்வப்போது கூறி வந்தாலும் அங்கு சில பகுதிகளில் வன்முறை நடந்த வண்ணம் தான் இருக்கிறது.
இந்த நிலையில் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரியை குக்கி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். முர்ரே நகரில் புதிதாக ஹெலிபேட் அமைக்க மாநில அரசு முடிவு செய்ததைத்தொடர்ந்து இதற்கான கட்டுமான பணிகளைப் பார்வையிடுவதற்காக நேற்று கமெண்டோ படையினருடன் போலீஸ் அதிகாரி ஆனந்த் குமார் அங்கு சென்றார். அப்போது, அங்கு மறைந்திருந்த பயங்கரவாத கும்பல் நடத்திய தாக்குதலில் ஆனந்த் குமார்சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த கும்பல் குக்கிசமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
போலீஸ் அதிகாரியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாகத்தேடி வருகின்றனர். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணமும், அரசு வேலையும் மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தி வருவதால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)