Skip to main content

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு போலீஸ் காவல் விதிப்பு!

Published on 31/05/2024 | Edited on 31/05/2024
Police custody imposed on Brajwal Revanna

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதாவது தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களைப் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்தப் புகார் குறித்துச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பிச் சென்ற நிலையில் அவருக்கு எதிராக விமான நிலையங்களுக்கு 2 வது லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதே சமயம் பிரஜ்வல் ரேவண்ணாவைக் கைது செய்ய சிபிஐ சார்பில் ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா இந்தியா வந்து சரணடைய வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா எச்சரிக்கை விடுத்திருந்தார். இத்தகைய சூழலில் தான் பிரஜ்வல் ரேவண்ணா மே 31 ஆம் தேதி எஸ்.ஐ.டி. முன்பு ஆஜராகி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் கர்நாடக மக்கள் மற்றும் தனது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். 

Police custody imposed on Brajwal Revanna

அதே சமயம் அவர் நாடு திரும்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. அப்போது பிரஜ்வல் ரேவண்ணாவை விமான நிலையத்திலேயே வைத்து கார்நாடக காவல்துறையினர் கைது செய்யவும் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. இத்தகைய சூழலில்தான் பிரஜ்வல் ரேவண்ணா இன்று (31.05.2024) நள்ளிரவு 01:30க்கு பெங்களூர் விமான நிலையத்தில் வந்தடைந்தார். அங்கு காத்திருந்த சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அவரை அதிரடியாக கைது செய்து சிறப்பு விசாரணை குழுவின் அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து 12 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பிரஜ்வல் ரேவண்ணா தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், “பிரஜ்வல் ரேவண்ணா மீது திட்டமிட்டு பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை” என வாதிட்டார். இதனையடுத்து சிறப்பு புலனாய்வு குழு சார்பில், “பிரஜ்வல் ரேவண்ணாவை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துக் கொண்ட நீதிமன்றம் பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்