/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/PMO3232_0.jpg)
பஞ்சாப்பில் தனக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திடம் பிரதமர் மோடி நேரில் விளக்கினார்.
இதற்கிடையில், பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் நாளை (07/01/2022) விசாரிக்கிறது.
பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி காரி சென்ற போது, சாலையில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தால், அவரது கார் 20 நிமிடங்கள் வரை மேம்பாலத்திலேயே நிற்க வேண்டியிருந்தது. இது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு எனக் கூறிய மத்திய உள்துறை அமைச்சகம், இது குறித்து விளக்கம் அளிக்க பஞ்சாப் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏதுமில்லை என்றும், இதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் எதுவுமில்லை என்றும் அம்மாநில முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கவலைத் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, குடியரசுத்தலைவரை பிரதமர் நரேந்திர மோடி இன்று (06/01/2022) நேரில் சந்தித்தார். அப்போது பஞ்சாப் பயணத்தின் போது நிகழ்ந்தவற்றை குடியரசுத்தலைவரிடம் பிரதமர் எடுத்துரைத்தார்.
முன்னதாக, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவும், பிரதமரிடம் தொலைபேசி மூலம் பஞ்சாப்பில் நடந்தது குறித்து கேட்டறிந்தார்.
இதனிடையே, பிரதமரின் பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது தொடர்பாக, மூத்த வழக்கறிஞர் மணிந்தர்சிங் தொடுத்த பொதுநல மனுவை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் ஒரு நகர்வாக, பிரதமரின் பஞ்சாப் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரிக்க, இரண்டு பேர் கொண்ட உயர்நிலைக் குழு ஒன்றை அம்மாநில அரசு அமைத்துள்ளது.
இக்குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதி, மாநில அரசின் முதன்மைச் செயலாளர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவானது, பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏதேனும் குளறுபடிகள் இருந்ததா என விசாரித்து மூன்று நாட்களில் அறிக்கையைச் சமர்ப்பிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)