Skip to main content

“இ.ந்.தி.யா கூட்டணியினர் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவிற்கு எதிரானவர்கள்” - பிரதமர் மோடி

 

 PM Modi says INDIA Alliance Against Women's Reservation Bill

 

ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. அதனால், இந்த 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகக் காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று ஆம் ஆத்மி, காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சியினரும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.

 

இதனிடையே, ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ராஜஸ்தானில் பிரதமர் மோடி, அசோக் கெலாட் ஆட்சியையும், காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் பா.ஜ.க சார்பில் சட்டமன்றத் தேர்தலையொட்டி பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் அரசின் தவறான ஆட்சியை அகற்ற ராஜஸ்தான் மக்கள் முடிவெடுத்து விட்டனர். அசோக் கெலாட் அரசு, ராஜஸ்தான் இளைஞர்களின் ஐந்தாண்டு காலத்தை வீணடித்துவிட்டது. ராஜஸ்தானில் விரைவில் மாற்றம் வரும். ஊழலுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுப்போம் என்று உத்தரவாதம் அளித்தோம். அதன் அடிப்படையில், இன்று ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

 

காங்கிரஸ் கட்சியால் 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்திருக்க முடியும். ஆனால், அவர்கள் அதை செய்யவில்லை. ஏனென்றால், மகளிருக்கு இட ஒதுக்கீடு கிடைப்பதை அவர்கள் ஒருபோதும் விரும்பியதில்லை. காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சியும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு எதிரானவர்கள். இந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நான் கொண்டு வரவில்லை. உங்களின் ஆதரவால் தான் இது சாத்தியமானது.  சனாதனத்தை அழிக்க நினைக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். இந்த தேர்தலில் மட்டுமல்ல ஒவ்வொரு தேர்தலிலும், காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணிக்கு ராஜஸ்தான் மாநிலம் பாடம் கற்பிக்கும். மேலும், அவர்கள் வேரோடு பிடுங்கி எறியப்படுவார்கள்” என்று பேசினார்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !