Skip to main content

காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர் இணைவதில் சிக்கல்!

Published on 09/10/2021 | Edited on 09/10/2021

 

prashant kishor

 

தேர்தல் வியூக வல்லுநரான பிரசாந்த் கிஷோர், தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலோடு தேர்தல் வியூகம் வகுக்கும் பணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன்பின்னர் சரத் பவார் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்த அவர், ராகுல் காந்தியையும் சந்தித்தார். இதனைத்தொடர்ந்து அவர் காங்கிரஸில் இணையப்போவதாக தகவல் வெளியானது.

 

மேலும் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைய அகில இந்திய அளவில் முக்கிய பொறுப்பினை கேட்பதாகவும், காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பிரசாந்த் கிஷோர் தங்கள் கட்சியில் இணைவது குறித்து விவாதித்து வருவதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதன்பின்னர் நடந்து முடிந்த நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு பிறகு பிரசாந்த் கிஷோர் கட்சியில் இணையப்போவதாக தகவல் வெளியானது.

 

இருப்பினும் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இன்னும் இணையவில்லை. இந்தநிலையில் பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் இணைக்கும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசியுள்ள பெயர் வெளியிட விரும்பாத காங்கிரஸ் தலைவர், கட்சியில் சேர பிரசாந்த் கிஷோர் வைக்கும் கோரிக்கைகள் மிகவும் அதிகமாக இருப்பதாக காங்கிரஸ் தலைமை நினைக்கிறது என தெரிவித்துள்ளார்.

 

அதேபோல் பிரசாந்த் கிஷோரை கட்சிக்குள் இணைப்பது தொடர்பாக கட்சிக்குள் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சிலர், பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைந்துவிட்டு அதன்மூலமாக திரிணாமூல் காங்கிரஸ் அல்லது தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு உதவலாம் என சந்தேகத்தை எழுப்பியதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இதுபோன்ற காரணங்களால் பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் இணைக்கும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன.

 

மேலும் பிரசாந்த் கிஷோர் காங்கிரசை விமர்சிக்கும் வகையில் சமீபத்தில் பதிவிட்ட ட்விட் இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருப்பதாக கருதப்படுகிறது. சில தினங்களுக்கு முன் பிரசாந்த் கிஷோர், "லக்கிம்பூர் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, பழம்பெரும் கட்சியின் தலைமையிலான (காங்கிரஸ்) எதிர்க்கட்சிகளின் விரைவான மற்றும் தன்னிச்சையான மறுமலர்ச்சியை எதிர்பார்ப்பவர்கள் பெரிய ஏமாற்றத்திற்கு தயாராகின்றனர். துரதிர்ஷ்டவசமாக பழம்பெரும் கட்சியின் ஆழமாக வேரூன்றிய பிரச்சனைகளுக்கும், கட்டமைப்பு பலவீனங்களுக்கு விரைவான தீர்வுகள் இல்லை" என ட்விட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்