The perverse decision of the IT employee in bangalore

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அதுல் சுபாஷ்(34). ஐ.டி ஊழியராக வேலை பார்த்து வந்த இவர், பெங்களூருவில் வசித்து வந்தார். இவருக்கு நிகிதா என்ற பெண்ணுடன் திருமணமாகி ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில், நேற்று முன் தினம் (09-12-24) 24 பக்கத்துக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு அதுல் சுபாஷ் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதோடு, அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு 81 நிமிடத்துக்கு பேசி வீடியோ ஒன்றையும் எடுத்துள்ளார்.

Advertisment

அவர் எழுதிய வைத்திருந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘கடந்த 2019ஆம் ஆண்டு மேட்ரிமோனி மூலம் நிகிதாவை திருமணம் செய்து கொண்டேன். அதன் பிறகு எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு, மனைவியுடைய குடும்பம், என்னிடம் அடிக்கடி லட்சக்கணக்கில் பணம் கேட்டனர். அவர்களுக்கு அதிக பணம் கொடுக்க மறுத்ததால், கோபமடைந்து நிகிதா கடந்த 2021ஆம் மகனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். அதனை தொடர்ந்து, என் மீதும் என்னுடைய குடும்பத்தினர் மீதும் மனைவி நிகிதா கொலை மற்றும் பாலியல் ரீதியான கொடுமை உள்பட பல்வேறு வழக்குகளை தொடுத்தார்.

Advertisment

மேலும், நான் வரதட்சணையாக ரூ.10 லட்சம் கேட்பதாகவும், நான் கொடுத்த அழுத்தத்தினால் தான் அவருடைய அப்பா மாரடைப்பால் இறந்துவிட்டார் எனவும் நிகிதா குற்றம் சாட்டினார். ஆனால், இதய நோய் காரணமாக கடந்த 10 வருடமாக அவருடைய அப்பா எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக என் மனைவி ஏற்கெனவே என்னிடம் கூறியுள்ளார். ஆனால், இந்த உண்மையை மறைத்துவிட்டு என்னுடைய மனைவி என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். ஆரம்பத்தில் மனைவியும் அவருடைய குடும்பத்தினரும் செட்டில் பணமாக ரூ.1 கோடி கேட்டார்கள். அதன் பிறகு, அதை உயர்த்தி ரூ.3 கோடியாக தரவேண்டும் என்று கூறினார்கள். இந்த வழக்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஜான்பூரில் நடந்து வந்தது. அதனால், இந்த வழக்குக்காக நான் பெங்களூருவில் இருந்த ஜான்பூருக்கு சுமார் 40 முறை பயணம் மேற்கொண்டு இந்த வழக்கை சந்தித்து வந்தேன். ஒவ்வொரு வழக்கும் முடியும் போதும், புது வழக்கு ஒன்றை என் மனைவி தொடுத்து வந்தார்.

ஒரு கட்டத்தில், ‘பொய் வழக்குகளால் ஆண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்’ என நான் நீதிபதியிடம் கூறியபோது, ‘அப்படியானால் நீ ஏன் அதை செய்யக்கூடாது’ என்று எனது மனைவி பதிலளித்தார். இதை கேட்ட நீதிபதியும் சிரித்துக்கொண்டே, என் மனைவியை அறையை விட்டு வெளியேறுமாறு கூறினார். எனது குடும்பத்தை பற்றி சிந்திக்க வேண்டும் என்று கூறி வழக்கை தீர்த்து வைக்க நீதிபதி என்னிடம் ரூ.5 லட்சம் கேட்டார். நான் எவ்வளவு கடினமாக உழைத்து, என் வேலையில் சிறந்து விளங்குகிறேனோ, அவ்வளவு அதிகமாக நானும் என் குடும்பமும் துன்புறுத்தப்படுவோம், மிரட்டி பணம் பறிக்கப்படுவோம். ஒட்டுமொத்த சட்ட அமைப்பும் என்னைத் துன்புறுத்துபவர்களை ஊக்குவிக்குகிறது. இப்போது, ​​நான் போய்விட்டால், பணமே இருக்காது. மேலும் எனது வயதான பெற்றோரையும் என் சகோதரனையும் துன்புறுத்த எந்த காரணமும் இருக்காது’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.