Skip to main content

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்.. முதல்வரைச் சூழ்ந்த பெண்கள்!

Published on 27/12/2022 | Edited on 27/12/2022

 

peoples request to puducherry chief minister for ration rice issue

 

ரேஷனில் இலவச அரிசி தருவதற்குப் பதிலாக புதுச்சேரி அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கி வருகிறது. இந்த முறையை மாற்றி மீண்டும் பழையபடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் மக்கள் முறையிட்டனர்.

 

புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் 20 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே கடந்த காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சிக் காலத்தில் அரிசி கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றதாகவும், இதனால் இலவச அரிசிக்குப் பதிலாக ரூ. 1000 பணத்தை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தவும் அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். தற்போது வரை ரேஷன் அரிசிக்கான பணம் மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

 

இதனிடையே, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தவளகுப்பம் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற போது அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து, "ரேஷன் அரிசிக்கு பணம் வழங்குவதற்குப் பதிலாக மீண்டும் இலவச அரிசி வழங்க வேண்டும். அரிசிக்குப் பதிலாக பணம் வழங்கும் போது பணம் உடனடியாக செலவாகி விடுகிறது. அதுமட்டுமல்ல, பணம் ஆண்களின் கணக்குக்குப் போவதால் அவர்கள் வீட்டிற்குக் கூட பணம் தருவதில்லை. அதனால், பணத்திற்குப் பதில் அரிசி வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் தேர்தல் வாக்குறுதியாக இதைத் தந்ததால் தான் உங்களுக்கு ஆதரவு தந்தோம்" என முறையிட்டனர்.

 

இதனைக் கேட்ட முதல்வர் ரங்கசாமி, “அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து இலவச அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என அப்பெண்களுக்கு உறுதி அளித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்