Skip to main content

அம்பானி வீட்டருகே நிறுத்தப்பட்ட வெடிகுண்டு கார் விவகாரம்; உரிமையாளர் மரணத்தால் மகாராஷ்ட்ராவில் பரபரப்பு!

Published on 05/03/2021 | Edited on 05/03/2021

 

car near ambani house

 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரான முகேஷ் அம்பானி, மும்பையின் கம்பல்லா ஹில் பகுதியில் ஆன்டிலியா என அழைக்கப்படும் ஆடம்பரமான இல்லத்தில் வசித்து வருகிறார். சமீபத்தில் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே, சந்தேகத்துக்கு இடமான கார் ஒன்று நின்றது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அந்தக் காரை சோதனையிட்டனர். அப்போது அந்தக் காரில் 20 கிலோ ஜெலட்டின் குச்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் காரிலிருந்து கடிதம் ஒன்றும், சில நம்பர் பிளேட்டுகளும் கைப்பற்றப்பட்டது. இந்த நம்பர் பிளேட்டில் ஒன்று, முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு வாகனத்தின் நம்பர் பிளேட்டோடு ஒத்துப்போவதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்ததில், வியாழக்கிழமை (25 பிப்.) இரவு ஒருமணிக்கு இரண்டு கார்கள் அப்பகுதிக்கு வருவதும், ஒருவர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே ஒரு காரை நிறுத்திவிட்டு, இன்னொரு காரில் ஏறி செல்வதும் பதிவாகியிருந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

 

இதுகுறித்து விசாரித்த காவல்துறையினர், அம்பானி வீட்டருகே நிறுத்தப்பட்டிருந்த காரின் உரிமையாளரைக் கண்டுபிடித்தனர். மன்சுக் ஹிரென் என்ற அந்த உரிமையாளர் தனது கார் முன்னரே காணாமல் போய்விட்டதாகக் கூறியுள்ளார். மேலும், அவர் கார் காணாமல் போனது குறித்து புகாரளித்திருப்பதும் தெரியவந்தது. இந்தநிலையில் இன்று மன்சுக் ஹிரென், தானேவில் உள்ள கல்வா கால்வாய்ப் பகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர் அந்த கால்வாயில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், மும்பை காவல்துறை ஆணையர் இதுகுறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார். மன்சுக் ஹிரென் மரணம் குறித்து தேசியப் புலனாய்வு முகமை விசாரிக்கவேண்டும் என மஹாராஷ்ட்ரா முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கோரிக்கை விடுத்துள்ளார். மன்சுக் ஹிரென் மரணம், அம்பானி வீட்டருகே வெடிபொருட்களுடன் கார் நின்ற விவகாரத்தை மேலும் பரபரப்பாகியுள்ளது.

 

இதனிடையே ஜெய்ஷ்-உல்-ஹிந்த் என்ற அமைப்பு டெலிகிராமில், வெடிபொருட்கள் நிரம்பிய காரை தாங்கள்தான் அம்பானி வீட்டருகே நிறுத்தியதாகவும், தங்கள் கோரிக்கைகளை அம்பானி நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தது. இதன்பிறகு, தங்கள் தான் உண்மையான ஜெய்ஷ்-உல்-ஹிந்த் எனக் கூறிய, அதேபெயரிலான இன்னொரு அமைப்பு, அம்பானி வீட்டருகே வெடிபொருட்களுடன் நின்ற காருக்கும் தங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்தது. இதுகுறித்து விசாரித்த போலீஸார், முதல் கடிதம் போலியானதாக இருக்கலாம் எனத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்