Skip to main content

மத்திய அரசின் உத்தரவாதத்தை நம்பாத விவசாயிகள் - போராட்டத்தை தொடர முடிவு!

Published on 08/12/2021 | Edited on 08/12/2021

 

farm movement

 

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஒரு வருடமாக விவசாயிகள், டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், அண்மையில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டன. இருப்பினும், குறைந்தபட்ச ஆதார விலைக்குச் சட்ட அங்கீகாரம், போராட்டத்தின்போது இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்துவருகின்றனர்.

 

இந்தச் சூழலில் மத்திய அரசு விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்பதாக எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளித்தது. அதுதொடர்பாக நேற்று (07.12.2021) ஆலோசித்த விவசாயிகளின் போராட்டத்தை ஒருங்கிணைத்துவரும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா, "நாங்கள் போராட்டத்தை முடித்த பிறகே, விவசாயிகளுக்கு எதிரான வழக்குகளைத் திரும்பப் பெறுவோம் என்று அரசாங்கம் கூறுகிறது. நாங்கள் அதைப் பற்றி அச்சப்படுகிறோம். வழக்குகளைத் திரும்பப் பெறும் நடைமுறையை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும். நாளை மதியம் 2 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் (போராட்டத்தை கைவிடுவது) இறுதி முடிவு எடுக்கப்படும். 700க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்குவதில் மத்திய அரசு பஞ்சாப் மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என விரும்புகிறோம். பஞ்சாப் அரசால் அறிவிக்கப்பட்ட ரூ. 5 லட்சம் இழப்பீடு மற்றும் வேலை என்பதை இந்திய அரசும் செயல்படுத்த வேண்டும்" என தெரிவித்தது.

 

இந்நிலையில் இன்று சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் ஐந்து பேர் கொண்ட கமிட்டியின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய கமிட்டியின் உறுப்பினர்களில் ஒருவரான குர்னாம் சிங் சாருனி, "எங்களின் கோரிக்கைகள் அனைத்தையும் அரசு ஏற்கும்வரை போராட்டம் தொடரும். நாங்கள் போராட்டத்தைத் திரும்பப் பெற்ற பிறகு, வழக்குகள் திரும்பப் பெறப்படவில்லை என்றால் எங்களுக்கு அது பிரச்சனையாக இருக்கும். வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவை அரசு அறிவிக்க வேண்டும்" என கூறியுள்ளார்.

 

இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக பேசிய ஐவர் கமிட்டியின் இன்னொரு உறுப்பினர் அசோக் தவாலே, "அரசின் முன்மொழிவில் சில குறைபாடுகள் இருந்தன. எனவே நேற்று இரவு, சில திருத்தங்களுடன் அதைத் திருப்பி அனுப்பினோம். அதில் அவர்களின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம். நாங்கள் போராட்டத்தை முடித்த பிறகு எங்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று அரசு கூறியது தவறு. குளிரில் இங்கே உட்கார்ந்திருப்பது எங்களுக்குப் பிடித்தமான ஒன்றல்ல. அவர்கள் (மத்திய அரசு) மின்சார மசோதாவை திரும்பப் பெறுவதாகவும் உறுதியளித்தனர். ஆனால் இப்போது அவர்கள் அதைப் பங்குதாரர்களுடன் விவாதித்து, பின்னர் அதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய விரும்புகிறார்கள். இது முரண்பாடானது" என கூறியிருந்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசு தயாரா?’ - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
Is the central govt ready to transfer education to the state list? CM MK Stalin

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தைக் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்தத் திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டிருந்தது இதனையடுத்து காலை உணவுத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும் எனக் கடந்த தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.07.2024) தொடங்கி வைத்தார்.

அதன்படி இந்த திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கீழச்சேரியில் உள்ள அரசு உதவிப் பெறும் புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தால் ஊரகப் பகுதிகளில் உள்ள 3 ஆயிரத்து 995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 மாணவ, மாணவியர்களுக்கு விரிவுபடுத்தி அவர்களுக்கு காலை உணவு வழங்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து உணவு உண்டார். அப்போது தனக்கு அருகில் அமர்ந்திருந்த சிறுமிகளுக்கு காலை உணவை ஊட்டி விட்டு அவர்களுடன் பேசியபடி முதல்வர் ஸ்டாலினும் உணவருந்தினார். 

Is the central govt ready to transfer education to the state list? CM MK Stalin

அதனைத் தொடர்ந்து காலை உணவுத் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஒரு மாணவர் கூட பசியோடு பள்ளிக்குச் செல்லக்கூடாது. காலை உணவுத் திட்டத்தில் பரிமாறப்படும் உணவின் தரம் ஒரு துளி கூட குறையக் கூடாது. காலை உணவுத் திட்டம் மூலம் பெற்றோரின் பொருளாதார சுமையை அரசு குறைத்துள்ளது. இத்திட்டம் அரசுக்கு செலவு இல்லை. எதிர்கால தலைமுறையை உருவாக்கும் முதலீடு. இத்திட்டத்தின் மூலம் 20.73 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் சத்தான உணவை சாப்பிடுகிறார்கள். 

Is the central govt ready to transfer education to the state list? CM MK Stalin

கடந்த 1975 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட அவசர நிலை பற்றி நாடாளுமன்றத்தில் அரசியலுக்காக தற்போது கேள்வி எழுப்பும் மத்திய பாஜக அரசு, அந்த நேரத்தில் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வித்துறையை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற தயாராக இருக்கிறதா?”எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் காலை உணவுத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டவுடன் தமிழ்நாடு முழுக்க எத்தனை குழந்தைகளுக்கு உணவளிக்கப்பட்டது என்பதை முதல்வரின் கண்காணிப்பு பலகை (CM DashBoard) வழியாகக் கண்காணித்து, மாணவச் செல்வங்களின் பசி போக்கிய மனநிறைவு அடைந்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யக்கூடாது” - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வலியுறுத்தல்!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
NEET exam results should not be cancelled central govt insistence on the SC

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. மேலும் நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

மேலும் இது தொடர்பான வழக்கில் மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதோடு இந்த வழக்கின் விரிவான விசாரணையை ஜூலை 8 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில் இளநிலை நீட் தேர்வில் பெரிய அளவிலான ரகசியத்தன்மை மீறப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் முழு தேர்வையும் ரத்து செய்வது நியாயமானதாக இருக்காது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அந்த பிரமாணப் பத்திரத்தில், “இளநிலை நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்வது தேர்வை எழுதிய லட்சக்கணக்கான நேர்மையான விண்ணப்பதாரர்களுக்கு தீவிரமான விளைவுகளை கொண்ட ஆபத்தை ஏற்படுத்தும். அனைத்து போட்டித் தேர்வுகளையும் நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்துவதில் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. 

NEET exam results should not be cancelled central govt insistence on the SC

எந்தவொரு தேர்விலும் வினாத்தாள்களின் ரகசியத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.  சில குற்றவியல் கூறுகளின் பேரில் சில குற்றச்செயல்கள் காரணமாக, ரகசியத்தன்மை மீறப்பட்டால் இதற்கு காரணமானவர்களை தண்டிக்கப்படுவதை உறுதிசெய்யவும், அந்த நபர் மீது சட்டத்தின் முன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சதி செய்தல், ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம் செய்தல், நம்பிக்கை மீறல் உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக முழு விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என மத்திய அரசு  தனது பிரமாணப் பத்திரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.