Skip to main content

டெல்லி எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட தமிழக எம்.பி.க்கள்!

Published on 04/02/2021 | Edited on 04/02/2021

 

mp

 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் போராட்டத்திற்குப் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்ததோடு, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து குடியரசுத் தலைவரின் உரையையும் புறக்கணித்தன. மேலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுமாறு அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில், போராடிவரும் விவசாயிகளை சந்திக்க, எதிர்க்கட்சி எம்.பி.க்களான கனிமொழி, திருமாவளவன், சு.வெங்கடேசன், ரவிக்குமார், திருச்சி சிவா, சுப்ரியா சுலே, ஹர்சிம்ரத் கவுர் பாதல் உள்ளிட்டோர் டெல்லியின் காசிப்பூர் எல்லைக்குப் பயணம் மேற்கொண்டனர். டெல்லி எல்லையை அடைந்த அவர்களை, டெல்லி காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

 

அதேநேரத்தில், காசிப்பூர் எல்லையில் தரையில் பதிக்கப்பட்டிருந்த ஆணிகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் டெல்லி எல்லைக்குச் சென்றுள்ள ஹர்சிம்ரத் கவுர் பாதல், "இந்தப் பிரச்சினையை (விவசாயிகளின் போராட்டம்) விவாதிக்கலாம் என்று நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். நாடாளுமன்றத்தில் சபாநாயகர் இந்தப் பிரச்சினையை எழுப்ப அனுமதிக்கவில்லை. இப்போது அனைத்து கட்சிகளும் இங்கு என்ன நடக்கிறது என்பது குறித்த விவரங்களைத் தரும்" எனக் கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘சுகர் வருவதற்காகவே ஸ்வீட் சாப்பிடுகிறார்” - கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Kejriwal accused by the enforcement department to eats sweets just to get sugar

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 15ஆம் தேதி விசாரனைக்கு வந்தது. அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதாடுகையில், “தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. வரும் 24 ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை இது குறித்து பதிலளிக்க வேண்டும். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதங்களை முன் வைக்கலாம்” என நீதிபதிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை அவர் அளித்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது, ‘தான் சர்க்கரை நோயால் அவதிப்படுகிறேன் என்றும், தனது ரத்த அளவுகளை மருத்துவரைக் கொண்டு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும்’ கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு இன்று (18-04-24) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோகப் ஹொசெயின், “சர்க்கரை நோய் அதிகம் உள்ளதாகக் கூறும் அரவிந்த் கெஜ்ரிவால், சிறையில் மாம்பழம் சாப்பிடுவது, இனிப்புகள் சாப்பிடுவது, சர்க்கரையுடன் டீ சாப்பிடுவது உள்ளிட்டவைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார். இரத்த சர்க்கரை அளவு ஏற்ற இறக்கங்களைக் காரணம் காட்டி மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் பெறுவதற்கான ஒரு களமாக இதைப் பயன்படுத்த கெஜ்ரிவால் விரும்புகிறார்” என்று வாதாடினார்.

இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் விவேக் ஜெயின், ‘அமலாக்கத்துறை வைக்கும் இந்தக் குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் இது போன்றத் தகவல் பரவ வேண்டும் என்பதற்காகவே இதைச் சுமத்துகிறது. மருத்துவர்கள் பரிந்துரையின் பேரிலேயே அவர் உணவுகளை எடுத்து வருகிறார்’ என்று கூறினார்.

Next Story

“ஜனநாயகமா? சர்வாதிகாரமா?” - கனிமொழி ஆவேசம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கனிமொழி, நேற்று (16/04/2024) ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி, “அம்மையார் ஜெயலலிதா ஒருமுறை சொன்னது போல் பரம்பரை பகைக்கான தேர்தல் தான் இது. சமூக நீதிக்கும் சமூகத்தின் அநீதிக்கும் இடையே நடக்கும் தேர்தல். ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய தேர்தல். ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்பதை முடிவு செய்ய வேண்டிய தேர்தல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஜனநாயகத்தின் மீது பா.ஜ.க.விற்கோ நரேந்திர மோடிக்கோ துளியும் நம்பிக்கை கிடையாது. 

பாராளுமன்றத்திற்கே வராத பிரதமர் என்ற பெருமை இருக்கிறது என்றால் பிரதமர் நரேந்திர மோடியையே சேரும். என்றாவது ஒருநாள் அவர் பாராளுமன்றத்தில் பேசுகிறார் என்றால் அவரது சாதனைகளையும் எதிர்க்கட்சிகளின் குறைகளையோ பேசுவதில்லை. யார் என்ன கேள்வி கேட்டாலும், முதலில் பிரதமர் மோடி, ஜவஹர்லால் நேரு கிட்ட சண்டை போடுவார். பெட்ரோல் விலை ஏன் ஏறியது எனக் கேட்டாலும், என்ன கேள்வி கேட்டாலும் ஜவஹர்லால் நேருவிடமிருந்து ஆரம்பிப்பார். எதிர்க்கட்சியினர் அவரை எதிர்த்து கேள்வி கேட்டதால், அனைவரும் வெளியேற்றப்பட்டோம்.

Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

எந்த விவாதத்திலும் அவருக்கு நம்பிக்கை கிடையாது. பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதில்லை. சமூக செயல்பாட்டாளர்கள் கேட்டால் அவர்கள் மீது வழக்கு. மலைவாழ் மக்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் உழைத்த 92 வயது முதியவரைத் தீவிரவாதி என வழக்குப் போட்டு சிறையில் அடைத்தனர். தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பெயில் கிடையாது. பா.ஜ.க.வில் உள்ள வாஷிங்மெஷினில் அக்கட்சியில் சேருபவர்கள் சுத்தம் செய்யப்படுகிறார்கள். எதிர்க்கட்சியினரை சிறையில் போடுவார்கள்.

விவசாயிகள் டெல்லிக்குள் வந்து விடக்கூடாது என்று ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டு, ரோட்டில் ஆணியை பதித்துக் கொண்டு விவசாயிகளைத் தடுக்கும் ஆட்சிதான் நரேந்திர மோடி ஆட்சி. மதத்தை வைத்து, ஜாதியை வைத்து மக்களை பிரிக்கக் கூடிய ஆட்சி. ஜிஎஸ்டி போட்டு சின்ன சின்ன கடைகள், சின்ன சின்ன வியாபாரிகள், சிறு, குறு தொழில்கள் என எல்லாத்தையும் நாசமாக்கி பலரைக் கடையை மூட வைத்த ஆட்சி பா.ஜ.க ஆட்சி.

தமிழகத்தில் ஜிஎஸ்டி வரியை எல்லாம் கொண்டு போய் ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு 29 பைசா மட்டுமே தரப்படுகிறது. ஆனால், பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு 3 ரூபாய் முதல் 7 ரூபாய் என வழங்கப்படுகிறது. ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வந்து எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. வெள்ளத்தில் வீடுகள் இடிந்த போது கவலைப்படவில்லை. ஆனால், கோவிலில் உண்டியலில் காசு போடாதீர்கள் தட்டில் போடுங்கள் என அறிவுரை வழங்குகிறார்.

தமிழகத்திற்கு வஞ்சனை செய்யக்கூடிய ஆட்சி பா.ஜ.க ஆட்சி. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது இங்கு வராத மோடி, தேர்தல் வந்ததும் தமிழகத்தை சுற்றிச் சுற்றி வருகிறார். பா.ஜ.கவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டுப் போட்டுவிடக்கூடாது. பா.ஜ.க கொண்டு வந்த சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க.விற்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

பெண்களுக்கு எதிராக குற்றங்களைப் புரியும் 44 பேர் எம்.பி.யாக பா.ஜ.க.வில் உள்ளனர்.  பா.ஜ.க எம்.பிக்கு எதிராகப் போராடிய மல்யுத்த வீராங்கனைகள் மீது வழக்குகள் போடப்பட்டது. தவறு புரிந்த அவர் மீது எந்த வழக்கும் போடவில்லை. ஹிந்தி படிக்க வேண்டும் என்று சொன்ன மோடி, தேர்தல் வந்ததும் தமிழ் படிக்க வேண்டும் என்கிறார்.  மக்களுக்கு எதிராக ஆட்சி செய்யக்கூடிய பாஜக புறக்கணிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். இந்த நாட்டுக்கு அவர்கள் தேவையில்லை என்பதை மக்கள் புரிய வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.