Skip to main content

திரிணாமூல் கட்சியோடு கூட்டணி வைக்க ராகுல் காந்தி ஆலோசனையா? - காங்கிரஸ் பொதுச்செயலாளர் விளக்கம்!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

rahul gandhi

 

கோவா மாநிலத்தில் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் சில தினங்களுக்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் கோவா மாநில பொறுப்பாளரான மஹுவா மொய்த்ரா, "கோவாவில் பாஜகவை தோற்கடிக்க திரிணாமூல் காங்கிரஸ் அனைத்து முயற்சிகளையும் செய்யும். மம்தா கடந்த காலத்தில் இதை செய்துள்ளார். மேலும் கோவாவில் கூடுதலாக ஒரு மைல் நடக்க தயங்க மாட்டார்" என தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு காங்கிரஸ்,கோவா பார்வேர்டு கட்சி, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி ஆகிய கட்சிகளை டேக் செய்திருந்தார்.

 

அதனைத்தொடர்ந்து காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ள கோவா பார்வேர்டு கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய், "கரோனா கட்டுப்பாடுகள் என்ற போர்வையில், ஜில்லா பரிஷத் தேர்தல்களில் செய்ததைப் போல, எதிர்க்கட்சிகளின் வெற்றியை தடுக்க பாஜக அனைத்து விஷயங்களையும் முயற்சிக்கும். காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி ஆகியவை சேர்ந்த கோவா அணி ஒன்றிணைந்து, வரலாறு மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

 

இதற்கிடையே கோவா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ப. சிதம்பரம், "திரிணாமூல் காங்கிரஸின் அறிக்கையை செய்தித்தாள்களில் படித்தேன், ஆனால் என்னிடம் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறப்படவில்லை. (கட்சி தலைமையின்) அதிகாரப்பூர்வ வார்த்தைக்காக நாம் காத்திருக்க வேண்டும். கோவாவில் பாஜகவை காங்கிரசால் தனியாக தோற்கடிக்க முடியும். காங்கிரஸுக்கு யாராவது ஆதரவு அளிக்க விரும்பினால் தாராளமாக அளிக்கலாம்" எனத் தெரிவித்தார். இதனால் கோவா தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி உருவாகலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

இந்தநிலையில் ராகுல் காந்தி, கோவா மாநில தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் மற்றும் கோவா மாநில பொறுப்பாளர் ப.சிதம்பரம் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் திரிணாமூல் காங்கிரஸோடு கூட்டணி வைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்தநிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், திரிணாமூல் காங்கிரஸோடு கூட்டணி அமைப்பது தொடர்பாக ராகுல் காந்தி ஆலோசித்ததாக வெளியான தகவல் வதந்தி எனவும், விரைவில் தாங்கள் கோவாவை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டுசெல்வோம் என நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஊழலின் நாயகன் பிரதமர்...” - ராகுல் காந்தி விளாசல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Prime Minister is the hero of corruption Rahul Gandhi 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி இந்தியா கூட்டணி சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி.யும், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதில் ராகுல் காந்தி எம்.பி. பேசுகையில், “இந்த தேர்தல் சித்தாந்தத்தின் தேர்தல். ஒருபுறம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவும், அரசியலமைப்பையும் ஜனநாயக அமைப்பையும் அழிக்க முயற்சிக்கின்ற. மறுபுறம், இந்தியா கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க முயற்சிக்கின்றன. தேர்தலில் 2-3 பெரிய பிரச்சனைகள் உள்ளன. முதலாவது வேலையில்லாத் திண்டாட்டம், இரண்டாவது  பணவீக்கம் ஆகும். ஆனால் பாஜக மக்களின் கவனத்தை திசை திருப்புவதில் ஈடுபட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, பிரதமர் ஏ.என்.ஐ.க்கு பேட்டி அளித்தார். இது ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட நிகழ்ச்சி. அதில் தேர்தல் பத்திரங்கள் குறித்து பிரதமர் விளக்க முயன்றார். வெளிப்படைத்தன்மைக்காகவும் தூய்மையான அரசியலுக்காகவும் தேர்தல் பத்திரங்கள் கொண்டுவரப்பட்டதாக பிரதமர் கூறுகிறார். இது உண்மையாக இருந்தால் ஏன் அந்த திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இரண்டாவதாக, வெளிப்படைத் தன்மையை கொண்டு வர விரும்பினால், பாஜகவுக்கு பணம் கொடுத்தவர்களின் பெயர்களை ஏன் மறைத்தீர்கள். மேலும் அவர்கள் உங்களுக்கு பணம் கொடுத்த தேதிகளை ஏன் மறைத்தீர்கள்?. தேர்தல் பத்திரங்கள் திட்டம் உலகின் மிகப்பெரிய மிரட்டி பணம் பறிக்கும் திட்டம். இந்தியாவின் அனைத்து தொழிலதிபர்களும் இதைப் புரிந்துகொண்டு அறிந்திருக்கிறார்கள். இது குறித்து பிரதமர் மோடி எவ்வளவு தெளிவுபடுத்த விரும்பினாலும், அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஏனென்றால், பிரதமர் ஊழலின் நாயகன் என்பது  நாட்டிற்கும் தெரியும். 

Prime Minister is the hero of corruption Rahul Gandhi 

கடந்த 10 ஆண்டுகளில் பணமதிப்பு நீக்கம், தவறான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு போன்ற மக்களை இன்னலுக்கு ஆளாக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளார். அதானி போன்ற பெரும் கோடீஸ்வரர்களுக்கு ஆதரவு அளித்து வேலைவாய்ப்பு உருவாக்கத்தை பிரதமர் மோடி குறைத்துள்ளார். மீண்டும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை வலுப்படுத்துவதுதான் எங்கள் முதல் பணி. வேலைவாய்ப்பு அளிப்பதற்கு நாங்கள் 23 யோசனைகளை வழங்கியுள்ளோம், ஒரு யோசனை புரட்சிகர யோசனை - உத்திரபிரதேசத்தின் அனைத்து பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோதாரர்களுக்கும் பயிற்சி பெறும் உரிமையை வழங்குவோம். மேலும், இளைஞர்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் டெபாசிட் செய்வோம். இந்த உரிமையை கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வழங்குகிறோம். போட்டித் தேர்வுக்கான வினாத்தாள்கள் கசிவுக்கு எதிராக சட்டம் இயற்றுவோம்” எனத் தெரிவித்தார். 

Next Story

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வில்லேஜ் குக்கிங் சேனல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Village cooking channel put an end to rumours

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனலில் வரும் சமையல் வீடியோவில் ‘இன்னைக்கு ஒரு புடி’என்ற வசனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவர் பெரியதம்பி தாத்தா. இவர் சமீபத்தில் இதயநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வில்லேஜ் குக்கிங் சேனல் நிர்வாகி சுப்ரமணியன் வேலுசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சூழலில் வில்லேஜ் குக்கிங் சேனலில் தோன்றும் தாத்தாவின் மருத்துவ செலவுக்கு உதவ காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி எம்.பி. மறுத்துவிட்டார் என பொய் செய்திகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் இந்த வதந்தியை சுப்ரமணியன் வேலுசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் வதந்தியாக பரப்பப்பட்ட செய்தியை மேற்கோள்காட்டி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இது முற்றிலும் பொய்!. எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது!.

இப்படி பொய் செய்திகளை பரப்புபவர்களது கட்சித் தலைமை இதனை கட்டுப்படுத்த வேண்டுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வில்லேஜ் குக்கிங் சமையல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது கிராமத்துச் சூழலில் ஓலைப்பாயில் சம்மணம் போட்டு அமர்ந்து காளான் பிரியாணியை ரசித்து சாப்பிட்ட வீடியோ மக்கள் மத்தியில் வைரலானது குறிப்பிடத்தக்கது.