தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் கரோனா, உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கிட்டத்தட்ட 13 சர்வதேச நாடுகளுக்குப் பரவியுள்ள இந்த ஒமிக்ரான் கரோனாவை தங்கள் நாடுகளில் பரவாமல் தடுக்கும் பொருட்டு, பல்வேறு நாடுகளின் அரசுகள் தங்கள் நாட்டிற்கு வரும் பயணிகளுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
ஜப்பான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டுக்கு வெளிநாட்டினர் வர தடை விதித்துள்ளன. இந்தநிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியுள்ள சிலருக்குக் கரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்கு ஏற்பட்டிருப்பது எந்தவகையான கரோனா தொற்று என கண்டறிய சோதனை ஆய்வு நடைபெற்றுவருகிறது.
இந்தநிலையில், மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் கரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை” என கூறியுள்ளார்.