Skip to main content

ஓரணியில் நிற்க அழைப்பு; ஆரம்பமே விரிசலா? - நிதிஷை நெருக்கடியில் தள்ளிய காங்கிரஸ்

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

nitish kumar bihar opposition party meeting

 

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தனர். இதற்கிடையில் பீகாரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் பல்வேறு மாநில முதல்வர்களைச் சந்தித்து நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

 

இது தொடர்பாக சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்,  உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார். இந்த நிலையில்தான் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து ஓரணியாகச் செயல்படுவது குறித்து ஆலோசிப்பதற்காக வரும் 12 ஆம் தேதி பீகாரில் பிரமாண்டமாக பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான அழைப்புக்களும் முறைப்படி எதிர்க்கட்சிகளுக்கு விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த நிதிஷ் குமார், “ஜூன் 12 ஆம் தேதி தங்களுக்கு வசதியாக இல்லை என்று காங்கிரஸும் மற்ற கட்சிகளும் என்னிடம் தெரிவித்தனர். அதனால்தான் கூட்டத்தை தள்ளி வைக்க முடிவு செய்தேன். மற்ற கட்சிகளுடன் ஆலோசித்து புதிய தேதி அறிவிக்கப்படும். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். கூட்டத்தில் பங்கேற்க சம்மதித்துள்ள அனைத்து எதிர்க்கட்சிகளின் சார்பிலும் அந்தந்த கட்சிகளின் தலைவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். கட்சி சார்பாக பிரதிநிதிகள் பங்கேற்பது ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார். 

 

இதனிடையே, பொதுக்கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் சார்பில் ஒரு முதல்வரும், மூத்த தலைவரும் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் கூறியிருந்தார். இந்த நிலையில் கட்சிகளின் சார்பில் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்காமல் தலைவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று நிதிஷ் குமார் கண்டிப்புடன் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா; தமிழக காங்கிரஸ் கண்டனம்

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Tamil Nadu Congress condemns Karnataka government on Cauvery issue

தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தலைமையில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து, தமிழகத்திற்குத் தண்ணீர் தரவே முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, “காவிரி பாசனப் பகுதியில் 28 சதவீதம் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. கர்நாடகாவின் வலியுறுத்தலை மீறி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் பற்றாக்குறை இருப்பதால் தற்போதைக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட  முடியாது” என்று தெரிவித்தார். மேலும் இது குறித்து ஆலோசனை நடத்தக் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சியினருக்கும் முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். 

இந்த நிலையில் கர்நாடக அரசுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நீரை ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்காக தண்ணீரை திறக்க வேண்டிய ஜூன் 12 ஆம் தேதி திறக்காத காரணத்தால் டெல்டா விவசாயிகள் நிலத்தடிநீரை பயன்படுத்தி கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. இந்நிலையில் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆணையின் படி 12 ஆம் தேதியில் இருந்து ஜூலை மாதம் இறுதிவரை நாளொன்றுக்கு 1 டி.எம்.சி. காவிரி நீரை திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசை அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஜூலை மாதம் வரை 1 டி.எம்.சி. நீரை திறந்துவிட முடியாது என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆணையின் படி மிக மிக குறைந்த நீரை தான் வழங்கும்படி கோரியிருந்தது. அந்த குறைந்தபட்ச நீரை கூட கர்நாடக அரசு தர மறுப்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. இந்த போக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை உதாசீனப்படுத்துகிற செயலாகும். 

காவிரி நீர் பங்கீட்டின்படி தமிழகத்திற்கு ஜூன் மாதம் ஏறத்தாழ 9 டி.எம்.சி.யும், ஜூலை மாதத்தில் 31 டி.எம்.சி.யும் ஆக மொத்தம் 40 டி.எம்.சி. தண்ணீர் பெறுகிற உரிமை நமக்கு இருக்கிறது. ஆனால் இதுவரை 4.6 டி.எம்.சி. தான் கர்நாடக அரசு கடந்த 10 ஆம் தேதி வரை வழங்கியிருக்கிறது. இதன்படி ஏற்கனவே 19.3 டி.எம்.சி. தரவேண்டிய நீர் நிலுவையில் இருக்கிறது. இதுகுறித்து காவிரி ஒழுங்காற்றுக் குழு குறிப்பிடாமல் பொதுவாக 12 ஆம் தேதியில் இருந்து நாள் தோறும் 1 டி.எம்.சி. வீதம் ஜூன் 31 ஆம் தேதி வரை வழங்க வேண்டும் என்று கூறியிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. இந்நிலையில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் குறைந்தபட்சமாக ஒரு நாளைக்கு 1 டி.எம்.சி. திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கையை மறுக்கிற வகையில் கர்நாடக அரசின் முடிவை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்க விரும்புகிறேன். தண்ணீர் பற்றாக்குறையில் குறுவை சாகுபடியை நிறைவு செய்யாமல் இருக்கும் சிரமமான நிலையை கர்நாடக முதலமைச்சர் புரிந்துகொண்டு காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை நிறைவேற்ற மறுக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மௌனம் காத்து வேடிக்கை பார்க்கிறது. கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தை புறக்கணித்து வந்த ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கை தமிழகத்தின் மீது அக்கறை இல்லை என்பதையே உறுதி செய்கிறது. எனவே காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையை நிறைவேற்ற பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

“ஸ்மிருதி இராணியை இழிவுபடுத்த வேண்டாம்” - ராகுல் காந்தி வேண்டுகோள்

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Rahul Gandhi said that Don't insult Smriti Irani

கடந்த 2019 நாடாளுமன்றத்  தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது குடும்பத் தொகுதியான அமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணி தோற்கடித்தார். அதேபோன்று இந்த முறையும் ராகுல் காந்தியை அமேதி தொகுதியில் தோற்கடிப்பேன் என்று ஸ்மிருதி இராணி சவால் விடுத்தார். ஆனால் கடைசி நேரத்தில் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடாமல், காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். 

அதே சமயம் அமேதியில் ஸ்மிருதி இராணியை எதிர்த்து ராகுல் காந்தி குடும்பத்தின் நம்பிக்கைக்குரிய நபரான கிஷோரி லால் சர்மாவைக் காங்கிரஸ் நிறுத்தியது. பின்னர் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இராணியைத் தோற்கடித்து கிஷோரி லால் சர்மா அமோக வெற்றிபெற்றார். இதனைத் தொடர்ந்து தோல்வியை ஒப்புக்கொண்ட ஸ்மிருதி இராணி, தொடர்ந்து அமேதி தொகுதி மக்களுக்காக பணியாற்றுவேன் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியினர் ஸ்மிருதி இராணிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

இந்த நிலையில் ஸ்மிருதி இராணியை இழிவுபடுத்த வேண்டாம் என நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பக்கத்தில், “வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் சகஜம். அதனால் அந்த விஷயத்தில் ஸ்மிருதி இராணி அல்லது வேறு எந்தத் தலைவர்களையும், இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும், கேவலமாக நடந்து கொள்வதையும் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மக்களை அவமானப்படுத்துவதும் அவமதிப்பதும் பலவீனத்தின் அடையாளம், வலிமை அல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.