Skip to main content

சாதிவாரி கணக்கெடுப்பு; உரிய முடிவை எடுக்க பிரதமரை வலியுறுத்தினோம் - பீகார் முதல்வர் பேட்டி!

Published on 23/08/2021 | Edited on 23/08/2021

 

bihar cm

 

இந்தியாவில் விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்தக் கோரி சில கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்பில் எஸ்சி மற்றும் எஸ்.டி பிரிவு மக்களைத் தவிர வேறு பிரிவு மக்களைச் சாதிவாரியாகக் கணக்கிடக் கூடாது என்று கொள்கை முடிவு எடுத்துள்ளதாக மத்திய அரசு அண்மையில் நிறைவடைந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தெரிவித்தது.

 

இருப்பினும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி வருகின்றன. இதில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளமும் இதே கோரிக்கையை முன்னிறுத்தி வருகிறது. இந்நிலையில், இன்று ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் தலைமையில், அனைத்து கட்சி குழு டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது.

 

இந்த அனைத்து கட்சி குழுவில், 10 கட்சிகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர். பிரதமரை சந்தித்ததற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், "சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து குழுவில் உள்ள அனைவரது கருத்துக்களையும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இது குறித்து உரிய முடிவை எடுக்குமாறு பிரதமரை வலியுறுத்தினோம். சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மாநில சட்டசபையில் இரண்டு முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறித்து அவரிடம் விளக்கினோம். பீகார் மக்களும், நாட்டு மக்களும் இந்த விவகாரத்தில் ஒரே கருத்தைத்தான் கொண்டுள்ளனர். நாங்கள் கூறியதைக் கேட்ட பிரதமருக்கு நன்றி. இப்போது இதில் அவர்தான் முடிவெடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

 

அதேபோல் அனைத்து கட்சி குழுவில் இடம்பெற்றிருந்த பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், "பீகாரில் மட்டுமல்ல, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவேண்டுமென எங்கள் குழு பிரதமரை சந்தித்துள்ளது. இப்போது இந்த விஷயத்தில் முடிவுக்காகக் காத்திருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்