Skip to main content

"ஆக்சிஜன் சிலிண்டர் வேண்டும்" - காங்கிரஸிடம் உதவி கோரிய நியூசிலாந்து தூதரகம்!

Published on 02/05/2021 | Edited on 02/05/2021

 

CONGRESS

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்துள்ளது. தினசரி கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மோசமடைந்து வருகிறது. டெல்லியில் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க, டெல்லி உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 

இந்தநிலையில், டெல்லியில் உள்ள நியூசிலாந்து தூதரகம், ஆக்சிஜன் சிலிண்டர் வேண்டுமென்று காங்கிரஸிடம் உதவி கேட்டுள்ளது. இதுதொடர்பாக நியூசிலாந்து தூதரகம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், காங்கிரஸ் இளைஞர் அணி தேசிய தலைவரிடம், "நியூசிலாந்து தூதரகத்திற்கு அவசரமாக ஆக்சிஜன் சிலிண்டர் அளித்து உதவ முடியுமா?" என கேட்டுள்ளது.

 

இந்தியாவிற்கான வெளிநாட்டு தூதரகம், மத்திய அரசை விடுத்து, ஆக்சிஜன் சிலிண்டர் வேண்டுமென எதிர்க்கட்சியிடம் உதவி கேட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் இளைஞர் அணி தேசிய தலைவர் ஸ்ரீனிவாஸும், அவரது தலைமையிலான இளைஞர் அணியும் டெல்லியில் ஆக்சிஜன் தொடர்பான உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காங்கிரஸுக்கு எந்தெந்த தொகுதிகள்; கையெழுத்தான ஒப்பந்தம்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Signed contract on Which constituencies for Congress

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன் தினம் (16-03-24) பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும், ஏழு கட்டங்களாக நடைபெறும், இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, வரும் ஜுன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் கடந்த 9ஆம் தேதி ஆலோசனை நடத்தினர். சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்தினர். இந்த தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் செல்வப்பெருந்தகை கையெழுத்திட்டனர்.

அதில், வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கையெழுத்தானது. தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும் புதுவை தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. முன்னதாக, திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் - 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் - 2 தொகுதி, ஐ.யூ.எம்.எல் - 1 தொகுதி, கொ.ம.தே.க - 1 தொகுதி, மதிமுக - 1 தொகுதி, விசிக - 2 தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் கையெழுத்தானது. அதில், கன்னியாகுமரி, திருவள்ளூர் (தனித்தொகுதி), கிருஷ்ணகிரி, சிவகங்கை, விருதுநகர், கரூர், கடலூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடவுள்ளதாக கையெழுத்து ஒப்பந்தமாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கடலூர், மயிலாடுதுறை மற்றும் திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் திமுக போட்டியிட்டு வெற்றி பெற்று நிலையில், இந்த முறை அந்த மூன்று தொகுதியையும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “நாங்கள் கேட்ட தொகுதிகளை வழங்கியுள்ளனர். எங்களுக்குச் சாதகமான 10 தொகுதிகளை கேட்டு பெற்றிருக்கிறோம். 2 அல்லது 3 நாட்களில் 10 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்” என்று கூறினார். 

Next Story

மும்பை புறப்பட்ட தமிழக முதல்வர்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
The Chief Minister of Tamil Nadu left for Mumbai

ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மும்பை புறப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த ஜனவரி 16ம் தேதி மணிப்பூரில் துவங்கினார். மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் வழியாக இந்த பயணம் நடைபெற்றது, இந்நிலையில் மும்பை தாதரில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான சைத்ய பூமியில் இன்று நிறைவு செய்யப்படுகிறது. இதற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறைவு விழாவில் காங்கிரஸ் அழைப்பின் பேரில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். அதன்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்த நிறைவு விழா கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். அதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்நிலையில் இந்த யாத்திரை நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக சற்று நேரத்திற்கு முன்பு சென்னை விமான நிலையத்திலிருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மும்பை புறப்பட்டுள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்று நடைபெறவிருக்கும் இந்த யாத்திரை நிறைவு விழா மற்றும் அதனை ஒட்டிய பொதுக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.