அண்மையில் கர்நாடகாவில் அருவி ஒன்றில் ரீல்ஸ் வீடியோவிற்கு மாசாக போஸ் கொடுத்த இளைஞர் சற்றும் எதிர்பாராத நேரத்தில் திடீரென கால் இடறி விழுந்து அருவியில் அடித்துச் செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி இருந்தது. இந்த நிலையில் இதேபோல கேரள மாநிலத்திலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்திலுள்ள பாரிப்பள்ளியைச் சேர்ந்தவர் சித்திக். இவருக்கும் நவுபியா என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் அன்சில் என்ற உறவினரின் வீட்டிற்கு இருவரும் விருந்துக்காக சென்றுள்ளனர். இருவரும் விருந்தை முடித்துவிட்டு மாலையில் அங்கே ஏதேனும் இடத்தை சுற்றிப் பார்க்கலாம் என முடிவெடுத்து அருகில் உள்ள ஆற்றுக்கு சென்றுள்ளனர்.
அன்சில் குடும்பத்தினரும் உடன் துணையாக சென்றுள்ளனர். அப்பொழுது ஆற்றின் கரையோரம் நின்று கொண்டிருந்த தம்பதிகள் இருவரும் அங்கிருந்த பாறை ஒன்றின் மீது ஏறி நின்று செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டுள்ளனர். அதற்காக முயன்ற பொழுது இருவரும் தடுமாறி ஆற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கினர். இருவரையும் காப்பாற்ற உறவினர் அன்சிலும்ல் ஆற்றில் குதித்தார். ஆனால் அவரும் நீரில் மூழ்கினார். உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் உடலைத் தேடினர். இறுதியாக மூவரின் உடலும் சடலமாக மீட்கப்பட்டது. செல்ஃபி எடுக்க முயன்று தம்பதி மட்டுமில்லாது, அவரைக் காப்பாற்றச் சென்ற உறவினரும் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.