
அமெரிக்கா அதிபரான டொனால்ட் டிரம்ப், கடந்த ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்ற போது பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிவர்களை கையாள்வதில் கடுமையான கொள்கைகளை அறிவித்தார். சட்டவிரோதமாக குடியேறிவர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு திரும்பி அனுப்பும் நிர்வாக உத்தரவிலும் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டினர்களை அடையாளம் காணப்பட்டு கைது செய்யும் பணி அமெரிக்கா முழுவதும் தீவிரமாக நடைபெற்றன.
முதற்கட்டமாக கடந்த 5ஆம் தேதி மெக்சிகோ, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோதமாக குடியேறிவர்களை அமெரிக்கா நாடு கடத்தியது. அதன்படி, 13 குழந்தைகள் உட்பட 104 இந்தியர்களை நாடு கடத்தி அவர்களின் கை கால்களை சங்கிலியால் கட்டப்பட்டு , சி-17 விமானம் மூலம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தரஸில் அனுப்பி வைக்கப்பட்டன. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நட்புறவு இருக்கும் நேரத்தில், இந்தியர்களின் கை கால்களை சங்கிலியால் கட்டப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன.
இந்த நிலையில், அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிய 116 இந்தியர்களை இரண்டாம் கட்டமாக நேற்று (15-02-25) அமெரிக்கா நாடு கடத்தியது. சி-17 விமானம் மூலம் பஞ்சாப்பிற்கு அவர்கள் அழைத்து வரப்பட்டனர். அதில், தாங்கள் அனைவரும் சங்கிலியால் கட்டுப்பட்டு அழைத்து வரப்பட்டதாக நாடு கடத்தப்பட்டவர்கள் கூறியுள்ளனர். விமானம் அமிர்தசரஸுல் தரையிறங்கிய பின்னரே, தங்கள் கைகள் மற்றும் கால்கள் அவிழ்த்துவிடப்பட்டதாக அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து கூறினர்.