Skip to main content

புனித் மறைவால் வாடும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நக்கீரன் ஆசிரியர் ஆறுதல்!

Published on 03/11/2021 | Edited on 03/11/2021

 

nakkheeran chief editor meets shivarajkumar and convey his condolence

 

கர்நாடக சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறந்தவர் புனித் ராஜ்குமார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் துரதிர்ஷ்டவசமாக காலமானார். இது கர்நாடகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருக்கும் சினிமா ரசிகர்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரின் மரணத்தால் அதிர்ச்சியடைந்து ரசிகர் இறந்துபோனது, மற்றொரு ரசிகர் தற்கொலை செய்துகொண்டது உள்ளிட்ட சம்பவங்கள் கர்நாடகாவையே உலுக்கின. 

 

சுமார் இருபது லட்சத்திற்கு மேலான மக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர். இன்னமும், அவரது நினைவிடத்திற்குச் சென்று, கதறி அழும் மக்களின் கூட்டம் குறையவில்லை. சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் பலரும் அவரின் நினைவிடத்திற்குச் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

 

அந்த வகையில், இன்று (03.11.2021) காலை புனித் இல்லத்திற்குச் சென்ற நக்கீரன் ஆசிரியர், புனித்தின் அண்ணன் சிவராஜ்குமாரை சந்தித்து ஆறுதல் கூறினார். நக்கீரன் ஆசிரியரைக் கண்ட சிவராஜ்குமார், அவரது கைகளைப் பிடித்தபடி, "எங்க கண்ணே பட்டுடுச்சி சார்" என உணர்ச்சி மேலிட கூறியது அங்கிருந்தோரைக் கலங்கச் செய்தது. தொடர்ந்து பேசிய சிவராஜ்குமார், "5  படம் சைன் பண்ணியிருக்கான். எல்லாமே அப்பு மட்டுமே நடிக்கக்  கூடிய மாதிரியான படம். வொர்க்கவுட்ட ரசிச்சு ரசிச்சு பண்ணுவான். இதெல்லாம் பாத்து எங்க கண்ணே பட்டுடுச்சு சார். அவன் எவ்ளோ நல்லது பண்ணியிருக்கான்னு அவன் செத்ததுக்கு அப்பறமாத்தான் எங்களுக்கே தெரியவந்துச்சு. ஒரு ப்ளாட் வாங்குறது, ப்ராபர்ட்டி வாங்குறதுன்னா என்கிட்டே சொல்லுவான். நீயும் அதுக்கு பக்கத்துல வாங்கு அண்ணன்னு ஆசையா சொல்லுவான்.

 

ஆனால், அவன் மக்களுக்கு செஞ்ச நல்லது எதையுமே எங்ககிட்ட சொல்லல. எவ்வளவோ பண்ணியிருக்கான். அதையெல்லாம் இப்போ நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கு. அவன் எங்களுக்கு செய்ய வேண்டியது எல்லாம் நாங்க அவனுக்குப் பண்ண வேண்டிய கொடுமையான நிலைமை வந்துடுச்சு. அன்னிக்கு அவனுக்கு ஹார்ட்-அட்டாக் வந்தப்ப, பதற்றத்துல பக்கத்துலேயே இருக்குற ஹாஸ்பிட்டல விட்டுட்டு அரைமணிநேரம் தூரத்துல இருக்குற இன்னொரு ஹாஸ்பிடலுக்குப் போய்ட்டோம். அதுல தப்பு பண்ணிட்டோம்னு தோணுது சார். அவனோட மரணத்துக்குப் பிறகு, நிறைய மீடியா செய்திகள கவர் பண்றோம்னு என்னென்னமோ எழுதுறாங்க. அதெல்லாம் பாக்கும்போது ரொம்ப சங்கடமா இருக்குது. 

 

ஷூட்டிங்குக்கு இடையில் வொர்கவுட் பண்ணுவான். ரொம்ப சரியா உடம்ப பாத்துப்பான். அவன் கடைக்குட்டிங்குறதால எங்க அப்பாவுக்கு அவன் மேல ரொம்ப பிரியம். அவனுக்காகவே படம் எல்லாம் எடுத்தாரு. அந்தப் படத்துல அவனுக்கு நல்ல பேரும் நெறைய விருதும் கிடைச்சது. அனாதையா இருந்த 1,800 புள்ளைங்கள படிக்க வச்சிருக்கான். இப்போ அவன் போனதால அந்தப் புள்ளைங்க மறுபடியும் அனாதையா மாறிடுமோன்னு கவலையா இருந்துச்சு. இந்த நேரத்துலதான், புனித்துக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த நடிகர் விஷால், அத்தனை குழந்தைகளின் கல்விச் செலவுகளையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என அறிவித்துள்ளார். இது ஆறுதலைத் தந்துள்ளது" என்றார் சன்னக் குரலில்.

 

இந்தச் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த நக்கீரன் ஆசிரியர், "புனித் ராஜ்குமாருக்கு நக்கீரன் குடும்பத்து மேல பெரிய அன்பு உண்டு. சென்னைக்கு ஒருமுறை பட வேலையா வந்திருந்தபோது, நக்கீரன் அலுவலகத்துக்கு வந்து மணிக்கணக்குல பேசிவிட்டுப் போனார். லட்சக்கணக்கான மக்கள் உணர்வெழுச்சியுடன் புனித்துக்கு அஞ்சலி செலுத்திவருவதைப் பார்க்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது. புனித் அப்பா ராஜ்குமார் வீரப்பனால கடத்தப்பட்டு காட்டுல இருந்தப்ப, அவரை மீட்பதற்கு இருமாநில அரசுகளின் தூதுவராக போயிருந்தோம். அப்போ துரோகிகளும் நம்முடனே பயணித்தார்கள். அப்போது, ஏதாவது தவறாக நடந்திருந்தால் நிலைமை என்ன ஆகியிருக்கும்? கர்நாடகாவில் உள்ள தமிழ் மக்களின் நிலைமை என்ன ஆகியிருக்கும்? நக்கீரனின் எதிர்காலம் என்னவாகியிருக்கும்? நல்வாய்ப்பாக அப்படி எதுவும் நிகழவில்லை. புனித் பெயருக்கு ஏற்றார்போல் புனிதமானவர். அவரின் புனித ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புனித் ராஜ்குமார் பெயரில் கோரிக்கை - நிறைவேற்றிய அரசாங்கம்

Published on 08/02/2023 | Edited on 08/02/2023

 

as per request by people Karnataka CM named a road Puneeth Rajkumar

 

கன்னட சினிமா உலகில் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கன்னட திரையுலகம் மட்டுமல்லாது இந்திய திரையுலகமே அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. திரைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பையும் ஏழைகளுக்கு அவர் செய்த பங்களிப்பையும் போற்றும் விதமாக கர்நாடக அரசாங்கம்  கர்நாடக ரத்னா விருது வழங்கியது.

 

இதனிடையே புனித் ராஜ்குமார் மறைவுக்கு பிறகு சாலைக்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று நகர மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் மைசூர் சாலையில் உள்ள நாயண்டஹள்ளி சந்திப்பு மற்றும் பன்னர்கட்டா சாலையில் உள்ள வேகா சிட்டி மால் இடையேயான 12 கி.மீ. தூர சாலைக்கு புனித் ராஜ்குமாரின் பெயரை சூட்டியுள்ளது.

 

இந்த நிகழ்வில் சிவராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் மற்றும் அஸ்வினி புனித் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கு அஸ்வினி புனித் ராஜ்குமார் சமூக ஊடகங்கள் வாயிலாக கர்நாடக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். புனித் ராஜ்குமாரை பல்வேறு வழிகளில் வாழ வைத்ததற்காக மாநில அரசு, கர்நாடகா ஃபிலிம் சேம்பர், திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் அனைவருக்கும் கடன்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

 

 

Next Story

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு விருது வழங்கும் விழா - கர்நாடக அரசு ரஜினிகாந்திற்கு அழைப்பு

Published on 29/10/2022 | Edited on 29/10/2022

 

Karnataka govt invites Rajinikanth, Jr NTR for Puneeth event

 

கன்னட சினிமா உலகில் பவர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த வருடம் இன்றைய தேதியில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கன்னட திரையுலகம் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகமே அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. திரைத்துறையில் தனது நடிப்பால் பல்வேறு விருதுகளைப் பெற்றதோடு சமுதாயத்திலும் கண்தானம், இலவச பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல உதவிகளைச் செய்து நிஜ வாழ்க்கையிலும் ரசிகர்கள் மத்தியில் ஹீரோவாகவே இருந்து வந்தார். திரைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பையும் ஏழைகளுக்கு அவர் செய்த பங்களிப்பையும் போற்றும் விதமாக மைசூர் பல்கலைக்கழகம் புனித் ராஜ்குமாருக்கு கௌரவ டாக்டர் பட்டம்  வழங்கியது. 

 

இதனைத் தொடர்ந்து மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னதாக அறிவித்திருந்தார். கர்நாடக மாநிலம் உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் 1 ஆம் தேதி புனித் ராஜ்குமாருக்கு விருது வழங்கி அம்மாநில அரசு கௌரவப்படுத்தவுள்ளது. இந்நிலையில், இந்த விருது வழங்கும் விழா கர்நாடக சட்டசபையான விதான சவுதாவில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த விருதினை வழங்குவதற்காக ரஜினிகாந்த் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தார்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 

 

புனித் ராஜ்குமார் மறைந்து இன்றுடன் (29.10.2022) ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அவர் கடைசியாக நடித்த 'கந்தாட குடி' படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படம் காடு மற்றும் நாட்டை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இயற்கை பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு படமாகும். மேலும் இப்படம் சித்தரிக்கப்பட்ட காட்சிகள் நிறைந்த ஒரு ஆவணப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.