நாகாலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டத்தில் உள்ள ஓட்டிங் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை (04.12.2021) இரவு, தீவிரவாதிகள் என நினைத்து அப்பாவி இளைஞர்கள் மீது பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில், ஒரு பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். அதேநேரத்தில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உயர்மட்டத்திலான சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும் என நாகாலாந்து முதல்வர் அறிவித்துள்ளார்.
அதேநேரத்தில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவுசெய்துள்ள நாகாலாந்து காவல்துறை, 'பாதுகாப்புப் படையினரின் நோக்கம் பொதுமக்களைக் கொலை செய்வதும் காயப்படுத்துவதுமே என்பது வெளிப்படை' என தனது முதல் தகவல் அறிக்கையில் கூறியுள்ளது. இந்தநிலையில், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் நாகாலாந்து துப்பாக்கிச்சூடு வன்முறைச் சம்பவம் தொடர்பாக 6 வாரத்தில் பதிலளிக்குமாறு பாதுகாப்புத்துறை செயலாளர், உள்துறை செயலாளருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.