Skip to main content

"மகாராஷ்ட்ர அரசாங்கத்தின் மனநிலையை காட்டுகிறது" -அர்னாப் கோஸ்வாமி கைது குறித்து நட்டா...

Published on 04/11/2020 | Edited on 04/11/2020

 

nadda about arnab goswami arrest

 

 

அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டதற்கு பாஜக தலைவர் நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். 

 

மும்பை காவல்துறை ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியின் இல்லத்திற்குள் நுழைந்து இன்று காலை அவரை கைது செய்தது. கட்டிட உள்வடிவமைப்பாளர் ஒருவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டதற்கு இவர்தான் காரணம் என்று தற்கொலை செய்து கொண்டவரின் மகள் அளித்த புகாரின் அடிப்படையில் அர்னாப் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தனது வீட்டிற்குள் நுழைந்த காவல்துறையினர் தன்னை, தனது மகன் மற்றும் மனைவியை உடல் ரீதியாகத் தாக்கியதாகவும் அர்னாப் கோஸ்வாமி தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. மேலும், ரிபப்ளிக் தொலைக்காட்சியில் வெளிவந்த வீடியோவின் படி, மும்பை போலீஸார் அர்னாப் கோஸ்வாமியை அடித்து முடியைப் பிடித்து இழுத்து வாகனத்தில் ஏற்றியதாக கூறப்படுகிறது. 

 

இந்நிலையில், அர்னாப் கோஸ்வாமி கைது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, "ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ள விதம், காங்கிரஸ் மற்றும் மகாராஷ்ட்ர அரசாங்கத்தின் மனநிலையை காட்டுகிறது. இது ஜனநாயகம் மற்றும் பத்திரிகை துறையின் கொள்கைகளுக்கு ஏற்பட்ட பெரிய அடியாகும். இதை நான் கண்டிக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க.வில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.! 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Aam Aadmi MP joined BJP!
ஜே.பி. நட்டா உடன் சுஷில் குமார் ரிங்கு

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சுஷில் குமார் ரிங்கு மற்றும் அம்மாநில எம்.எல்.ஏ. ஷீத்தல் அங்கூரல் ஆகியோர் இன்று (27.03.2024) தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டனர். இது குறித்து சுஷில் குமார் ரிங்கு கூறுகையில், “ஜலந்தரின் வளர்ச்சிக்காக இந்த முடிவை எடுத்துள்ளேன். ஜலந்தரை முன்னோக்கி கொண்டு செல்வோம். மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் ஜலந்தருக்கு கொண்டு செல்வோம். ஜலந்தர் மக்களுக்கு நான் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பது உண்மைதான், ஏனெனில் எனது கட்சி (ஆம் ஆத்மி) எனக்கு ஆதரவளிக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் செயல்பாடுகளால் நான் ஈர்க்கப்பட்டேன்.

Aam Aadmi MP joined BJP!
ஜே.பி. நட்டா உடன் ஷீத்தல் அங்குரல்

மேலும் பா.ஜ.க.வில் இணைந்த ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. ஷீத்தல் அங்குரல் கூறுகையில், “இப்போது அவர்களை (ஆம் ஆத்மியை) அம்பலப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. பஞ்சாப் மக்களிடம் ஆம் ஆத்மி பொய் கூறியுள்ளது. ஆபரேஷன் தாமரை தொடர்பான ஆதாரங்களை விரைவில் கொண்டு வருவேன்” எனத் தெரிவித்தார். ஆம் ஆத்மியைச் சேர்ந்த எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர் பாஜகவில் இணைந்தது அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் சுஷில் குமார் ரிங்கு மற்றும் ஷீத்தல் அங்கூரல் ஆகியோர் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

Next Story

பதவியை ராஜினாமா செய்த ஜே.பி. நட்டா!

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
JP nadda resigned from the post

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது.

அந்த வகையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது. இந்த பட்டியலில் நட்சத்திர வேட்பாளராக வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. காந்தி நகர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் போட்டியிடவுள்ளார். மலையாள நடிகரும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மத்தியப் பிரதேசத்தின் குணா தொகுதியில் போட்டியிடுகிறார்.

மேலும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரத்தில் போட்டியிடுகிறார். ராஜஸ்தானின் கோட்டா தொகுதியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மீண்டும் போட்டியிடுகிறார். மதுராவில், நடிகையும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான ஹேமமாலினி மீண்டும் போட்டியிடுகிறார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி மீண்டும் போட்டியிடுகிறார். மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரான சிவ்ராஜ் சிங் சவுகான் விதிஷா தொகுதியில் போட்டியிடுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமாவை மாநிலங்களவைத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான ஜெகதீப் தங்கர் ஏற்றுக்கொண்டுள்ளார். இது குறித்து ராஜ்ய சபா சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “இமாச்சலப்பிரதேச மாநிலத்திற்கு பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜகத் பிரகாஷ் நட்டா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை ராஜ்யசபா தலைவர் ஏற்றுக்கொண்டார்” என ராஜ்யசபா பொதுச் செயலாளர் பி.சி. மோடி தெரிவித்துள்ளார்.

அதே சமயம் மீதமுள்ள மக்களவைத் தொகுதிக்கான பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் ஜே.பி. நட்டா மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு பா.ஜ.க. தேசியத் தலைவர் நட்டா போட்டியின்றி கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.