Skip to main content

ஆங்கிலத்தில் பேசியதால் கொலைசெய்தேன்!!!

Published on 24/03/2018 | Edited on 24/03/2018



 

MURDERED BY SPEAKING ENGLISH!!!

 

மும்பையில் 21 வயது இளைஞன் ஒருவன் 18 வயது நிரம்பிய தனது நண்பனை தன்னிடம் எப்பொழுதும் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்ததாலும், தனக்கு கல்வியறிவு குறைவு என்று அடிக்கடி  சுட்டிக்காட்டிக்கொண்டிருந்ததாலும் 54முறை தொண்டையில்  கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் மும்பையில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகமது அமீர் அப்துல் வாஹித் ரஹீன் வயது 21, முகமது அபிராஸ் ஆலம் ஷேக் வயது 18 இருவரும் நண்பர்கள். வாஹித் ரஹீன் படிக்காததால் முகமது அபிராஸ் அவனிடம் எப்பொழுதும் ஆங்கிலத்தில் பேசுவதும், படிக்காதவன் என்று கேலி செய்வதுமாகவே இருந்துள்ளான். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத வாஹித் ரஹீன்,கடந்த புதன்கிழமை வாஹித் ரஹீன்,அபிராஸை வற்புறுத்திக் குடிக்க அழைத்துள்ளான். இருவரும் குடித்துள்ளனர், அபிராஸ் கழிவறைக்கு சென்றபொழுது பின்தொடர்ந்து சென்ற ரஹீன் தன்னிடமிருந்த கத்தியைக்கொண்டு அபிராஸின் தொண்டையில் குத்தியுள்ளான். பிறகு இறந்துவிட்டானா என்பதை உறுதி செய்ய 54 முறை தொண்டையில் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளான் ரஹீன் .

கொலைசெய்தவுடன், ரஹீன் தானாக ஷாகு நகர் காவல்நிலையத்திற்கு சென்று அபிராஸை தான் கொலைசெய்துவிட்டதாக கூறி சரணடைந்துள்ளான். மேலும் அவன் உடல் இருக்கும் இடத்திற்கு அழைத்துசென்று காண்பித்துள்ளான். போலீசார் இரவு ஒரு மணியளவில் அபிராஸ் உடலை ரஹேஜா பாலத்தின் அடியில் கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்து காவல்துறை மேல் அதிகாரி கூறியது, "ரஹீனை, அபிராஸ் படிக்காதவன் என்று கேலி செய்துவந்துள்ளான். அதனால் கோபமடைந்த ரஹீன் அவனை பழிவாங்க ஒருவாரமாக திட்டமிட்டுள்ளான், சமயம் வந்ததும் அபிராஸை கொன்றுள்ளான்".

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.க.வினால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
BJP is the biggest threat to India Chief Minister MK Stalin

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த ஜனவரி 16 ஆம் தேதி மணிப்பூரில் துவங்கினார். இந்த யாத்திரை மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக நடைபெற்றது. இதனையடுத்து மும்பை தாதரில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான சைத்ய பூமியில் இன்று (17.03.2024) நிறைவு செய்யப்பட்டது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிறைவு விழாவில் காங்கிரஸ் கட்சியின் அழைப்பின் பேரில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அதன்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்த நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை வெற்றிகரமாக நிறைவு செய்த ராகுல் காந்திக்கு எனது வாழ்த்துகள். மும்பையை அடைந்துள்ள இந்தியா கூட்டணி விரைவில் டெல்லியை அடையும். நாடாளுமன்ற மக்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், அவர் உச்சநீதிமன்றம் வரை சென்று வென்றார். மக்களை பிரித்தாளும் பா.ஜ.க.வை விரைவில் ஆட்சியில் இருந்து அகற்றுவோம். பா.ஜ.க.வின் பிரித்தாளும் சூழ்ச்சி, பொய் பிரச்சாரம் ஆகியவற்றை இந்தியா கூட்டணி விரைவில் முறியடிக்கும்.

இந்தியா கூட்டணியால் அச்சமடைந்துள்ள பிரதமர் மோடி, இந்த கூட்டணிக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்தார். தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க.வின் ஊழல் முகம் அம்பலமாகியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் பா.ஜ.க. ரூ. 8 ஆயிரத்து 250 கோடியை குவித்துள்ளது. இந்தியா கூட்டணியின் ஒரே இலக்கு பா.ஜ.க.வை தோற்கடிப்பது தான். பா.ஜ.க.வினால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது” எனத் தெரிவித்தார்.

முன்னதாக ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் இந்தியா கூட்டணியின் மற்ற தலைவர்கள் மும்பை சிவாஜி பூங்காவில் உள்ள பாலாசாகேப் தாக்கரேவுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் சத்ரபதி சிவாஜியின் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “உத்தரப் பிரதேசத்தில் மார்ச் 20 முதல் வேட்புமனு தாக்கல் செய்யும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, இதன் காரணமாக நான் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது” என்று கூறப்பட்டுள்ளது. 

Next Story

“20 கோடி அல்ல... 200 கோடி தரணும்...” - முகேஷ் அம்பானிக்கு வந்த மிரட்டல்

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

Threat received by Mukesh Ambani for Rs. 200 crore

 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிறுவனர் முகேஷ் அம்பானிக்கு பணம் கேட்டு மீண்டும் மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது. 

 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகித்து வருகிறார். இவருக்கு கடந்த 27 ஆம் தேதி மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில், ‘நீங்கள் 20 கோடி ரூபாய் தரவேண்டும். அப்படி கொடுக்கவில்லை என்றால் உங்களைக் கொன்று விடுவோம். இந்தியாவில் சிறந்த துப்பாக்கிச் சுடும் நபர்கள் உள்ளனர்’ என்று குறிப்பிட்டிருந்தது. 

 

இந்தக் கொலை மிரட்டல் குறித்து மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் அண்டிலா வீட்டின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காம்தேவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் மும்பை காம்தேவி காவல்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

இந்த நிலையில் நேற்று முன்தினம் (28-10-23) முகேஷ் அம்பானிக்கு மீண்டும் மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. அதில், இந்த முறை ரூ. 200 கோடி தரவேண்டும். இல்லையென்றால் கொலை செய்து விடுவோம்’ என்று தெரிவித்திருந்தது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், ஏற்கனவே ரூ.20 கோடி கேட்டுக் கொலை மிரட்டல் விடுத்த நபர் தான் இந்த மின்னஞ்சலை அனுப்பியுள்ளார் என்று தெரியவந்தது. இதையடுத்து, அடுத்தடுத்த நாட்களில் முகேஷ் அம்பானிக்கு பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர். முகேஷ் அம்பானிக்கு தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.