Skip to main content

முல்லைப் பெரியாறு அணையில் அதிகாரிகள் ஆய்வு!

Published on 29/05/2024 | Edited on 29/05/2024
Mullai Periyar dam officials inspection

கேரள மாநிலத்தில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணைக்குக் கீழே 336 மீட்டரில் புதிய தடுப்பணை கட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசிடம் கேரள அரசு கோரிக்கை வைத்தது. இது தொடர்பாகச் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை செய்வதற்கான ஆய்வு எல்லைகள் கோரி கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் கேரள அரசு விண்ணப்பித்தது. அதில், “தற்போதுள்ள அணைக் கட்டப்பட்டு 128 ஆண்டுகள் ஆனதால் பாதுகாப்பு கருதி புதிய அணைக் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய அணைக் கட்டிய பின்னர் தமிழகத்திற்கு தற்போது வழங்குவதைவிட அதிக தண்ணீரை வழங்க முடியும்” எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த விண்ணப்பம் தொடர்பாக நேற்று (28.05.2024) மதிப்பீட்டுக் குழுவின் பரிசீலனைக்காகப் பட்டியலிடப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் தான் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான டெல்லியில் நேற்று நடக்க இருந்த கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. அதே சமயம் முல்லைப் பெரியாரில் புதிய அணை, சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்ட தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 13 மற்றும் 14 ஆகிய இரு நாட்கள் மத்திய கண்காணிப்புக் குழு ஆய்வு செய்ய உள்ளது எனத் தமிழ்நாடு நீர்வளத்துறைத் தெரிவித்துள்ளது. மத்திய நீர்வள தலைமை பொறியாளர் தலைமையிலான குழு இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளது. புதிய அணை கட்ட கேரள அரசு அனுமதி கோரியது சர்ச்சையான நிலையில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என்று கேரள அரசு கூறி வந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது. அதே சமயம் பேபி அணைப் பகுதியைப் பலப்படுத்தி அணையின் நீரைமட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது.

அந்த தீர்ப்பின் அடிப்படையில் அணையைக் கண்காணிப்பதற்காக மூன்று பேர் மற்றும் ஐந்து பேர் கொண்ட இரு குழுக்களை உச்சநீதிமன்றம் நியமித்திருந்தது. இதனையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மூவர் குழுவில் தொழில்நுட்ப வல்லுநர்களும் இணைக்கப்பட்டது. இக்குழு அணையின் பருவகால சூழலின் அடிப்படையில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி (18.03.2024) ஆய்வுக் குழு அணையை ஆய்வு செய்ய முடிவு செய்திருந்தது. அச்சமயம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இந்த ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது கவனிக்கத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது!

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
ADMK former minister MR. Vijayabaskar arrested

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளனர்' என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

அதே சமயம் இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இதனால் தொடர்ந்து தலைமறைவாக  இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டிவரும் நிலையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரைப் பிடிக்க முயன்று வந்தனர். இதனால் கடந்த 2 ஆம் தேதி (02.07.2024) மீண்டும் ஒரு முன்ஜாமீன் மனுவைக் கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் எம்.ஆர். விஜயபாஸ்கர் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையின் போது இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சண்முகசுந்தரம் இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து முன்ஜாமின் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும் அவரது சகோதரரும் சேகரும் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் நில மோசடி புகாரில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கேரளாவில் பதுங்கி இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை தனிப்படை போலிசார் கைது செய்துள்ளனர்.

Next Story

12 மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை; அச்சத்தில் வயலோகம் கிராமம்

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
 12 students with jaundice; Wayalogam village in fear

புதுக்கோட்டையில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 12 பள்ளி மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் வீடு வீடாகச் சென்று சுகாதாரப் பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் கிராமத்தில் வசித்து வரும் 12 பள்ளி மாணவர்களுக்கு அடுத்தடுத்து மஞ்சள் காமாலை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் ஒரு சிறுவன் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியான நிலையில், அந்த செய்தி வயலோகம் பகுதி கிராம மக்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

குடிநீர் தொட்டியின் சுகாதாரமின்மையால் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவ, ஊராட்சி நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீரை நிறுத்தி விட்டு வாகனத்தில் கொண்டுவரப்படும் தண்ணீர் டேங்க் மூலம் குடிநீர் சேவை வழங்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. உடனடியாக  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வயலோகம் கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.