Skip to main content

1400 கிலோமீட்டர் பயணம்... தனியாளாக மகனை மீட்ட தாயின் பாசப்போராட்டம்...

Published on 10/04/2020 | Edited on 10/04/2020


ஊரடங்கு காரணமாக வெளியூரில்  சிக்கியிருந்த தனது மகனை 1400 கிலோமீட்டர் இருசக்கர வாகனத்திலேயே பயணம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் பெண் ஒருவர். 

 

mom travels 1400 kilometer amid lockdown to see her son

 

 

உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 லட்சம் என்ற அளவிலும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.6 லட்சம் என்ற அளவிலும் உள்ளது. இந்த வைரஸ் தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95,000 ஐ கடந்துள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பால் 5000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கால் வெளியூரில் சிக்கியிருந்த தனது மகனை 1400 கிலோமீட்டர் இருசக்கர வாகனத்திலேயே பயணம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் பெண் ஒருவர்.

தெலங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் மாவட்டத்தின் பாதன் நகரைச் சேர்ந்தவர் ரஸியா பேகம். பள்ளி ஆசிரியையான இவரின் 17 வயது மகன் முகமது நிஜாமுதீன் 12-ம் வகுப்பு முடித்து விட்டு மருத்துவ நுழைவுத் தேர்வுக்குத் தயாராகி வருகிறார். ஊரடங்குக்கு முன்பு நெல்லூரில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்குச் சென்றுள்ளார் நிஜாமுதீன். அப்போது திடீரென ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வீட்டிற்குத் திரும்ப முடியாமல் தவித்துள்ளார். நண்பரது வீட்டில் இருக்கும் தனது மகனைப் பார்க்க விரும்பிய தாய், கார் மூலம் மகனை அழைத்து வர நினைத்துள்ளார். ஆனால் ஊரடங்கு காரணமாக கார் ஏதும் கிடைக்காததால், தானே சென்று தனது மகனை அழைத்துவருவது என முடிவெடுத்த அவர், அதற்காகக் காவல் இணை ஆணையரிடம் அனுமதி கடிதமும் பெற்றுள்ளார்.

 

http://onelink.to/nknapp



பின்னர் தனது இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை காலை தனது வீட்டிலிருந்து புறப்பட்ட ரஸியா 700 கிலோமீட்டர் பயணம் செய்து செவ்வாய்க்கிழமை மதியம் நெல்லூர் சென்றடைந்துள்ளார். இந்தப் பயணத்தின்போது பல்வேறு இடங்களில் போலீஸாரால் இடைநிறுத்தப்பட்ட ரஸியா, காவல்துறையிடம் பெற்ற அனுமதி கடிதத்தைக் காட்டி தனது பயணத்தைத் தொடர்ந்துள்ளார். மேலும், பல இடங்களில் காவல்துறையினர் இவருக்கு உதவி புரிந்து பாதுகாப்பான வழிகளையும் கூறியுள்ளனர். இப்படியாக செவ்வாய்க்கிழமை மதியம் நெல்லூர் சென்றடைந்த ரஸியா தனது மகனை அழைத்துக்கொண்டு புதன்கிழமை மாலை பாதன் நகரம் வந்து சேர்ந்தார்.

மகனை மீட்கச் சென்ற தனது இந்தப் பயணம் குறித்து பேசியுள்ள ரஸியா, "நான் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பே எனது கணவரை இழந்துவிட்டேன். எனக்கு இரு மகன்களும், ஒருமகளும் உள்ளனர். இதில் இளைய மகன் நிஜாமுதீன் லாக்டவுன் தொடங்கும் முன் தனது நண்பரின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரைப் பார்க்க நெல்லூருக்குச் சென்றார். ஆனால், திடீரென லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் அங்கேயே தங்கிவிட்டார். கடந்த 15 நாட்களுக்கு மேலாக எனது மகனைப் பிரிந்திருந்தேன்.

எனது மனது கேட்கவில்லை. எனவே நான் காவல் இணை ஆணையரிடம் எனது நிலைமையை எடுத்துக்கூறி உதவக் கோரினேன். அவரும், நான் லாக்டவுன் நேரத்தில் பயணிக்க அனுமதியளித்து கடிதம் ஒன்றை வழங்கினார். அந்தக் கடிதம் மூலம் ஆந்திர மாநிலம் வரை சென்று மகனை அழைத்து வந்தேன். பல இடங்களில் காவல்துறையினர் எனக்கு உதவியாக இருந்தனர். அவ்வப்போது ஓய்வு எடுத்துச் செல்லும்படி போலீஸார் என்னை அறிவுறுத்தினார். என் மகனைப் பார்த்தபின்தான் நான் இழந்திருந்த ஒட்டுமொத்த சக்தியும் எனக்குத் திரும்ப வந்தது" எனத் தெரிவித்துள்ளார். மகனை மீட்டு வந்த ரஸியா கண்ணீர் மல்க காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்