நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில் ஏற்கனவே 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்னும் இரண்டு கட்ட தேர்தல் முடிந்தவுடன் மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த இரண்டு கட்ட தேர்தலுக்கான பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அந்த வகையில் அரியானா மாநிலம், குருசேத்திரத்தில் நேற்று நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியை சாடி பேசினார். அப்போது பேசிய அவர், "காங்கிரஸ் கட்சி தொடர்ந்து என்னை நோக்கி தவறான வார்த்தைகளை வீசி வருகிறது. என்னை ஹிட்லர், தாவூத் இப்ராகிம், முசோலினி போன்றோருடன் எல்லாம் ஒப்பிட்டது. மேலும் புழு பூச்சியுடன் ஒப்பிட்டனர். காங்கிரஸ் தலைவர் ஒருவர் என்னை பைத்தியக்கார நாய் என்றார். மற்றொருவர் என்னை குரங்கு என்றார்.
இவ்வளவு ஏன்? என்னுடைய தயை கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. அவரையும் அவர்கள் அவதூறான வார்த்தையால் பேசினார்கள். எனது தந்தை யார் என்று கேட்டனர். இதெல்லாம் நான் பிரதமர் ஆன பிறகு அவர்கள் சொன்னதுதான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்" என கூறினார். மேலும் தன்னை அரச குடும்பம் என நினைத்த காங்கிரஸ் குடும்பத்தினரை சிறை வாசலில் நிற்க வைத்து ஜாமீனுக்காக போராட வைத்துள்ளேன் இந்த காவலாளி என கூறினார்.