மேகதாது அணை குறித்து காவிரி நீர் மேலாண்மை கூட்டத்தில் கர்நாடக தரப்பு விவாதிக்க நிர்ப்பந்தித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு சார்பில் நீர்வளத்துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலத்தைச் சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு கர்நாடகா காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவது தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது. ஆனால் தமிழக அரசு அதிகாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் இது தொடர்பாக விவாதிக்கக் கூடாது என எதிர்த்தனர்.
அதேநேரம் கர்நாடக தரப்பு அதிகாரிகள், மேகதாது அணை என்பது தங்கள் மாநிலத்தில் கண்டிப்பாக கட்டப்பட வேண்டிய ஒன்று எனவே இந்த கூட்டத்தில் இது தொடர்பாக கட்டாயம் விவாதிக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இரு தரப்பு அதிகாரிகளும் மாறி மாறி எதிர்ப்புகளைத் தெரிவித்துக் கொண்டதால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால் இறுதி வரை கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படவில்லை. கடந்த மூன்று கூட்டங்களாகவே மேகதாது குறித்து விவாதிக்கப்படாத நிலையில், இன்றும் மேகதாது குறித்து விவாதிக்கப்படாமல் கூட்டம் நிறைவு பெற்றது.