
2026ஆம் ஆண்டுக்குப் பின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களுக்கு நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்படவேண்டிய முடிவுகள் குறித்தும், ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்துத் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளச் சென்னையில் நாளை (22.03.2025) ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ், ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடகா துணை முதலமைச்சர் சிவகுமார், பஞ்சாப் முதலமைச்சர் பகவத்மான், ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஆந்திரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். மேலும் இக்கடிதம் இந்த 7 மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு முக்கியக் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் இந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் ஜனசேனா கட்சி சார்பில் அக்கட்சியின் பிரதிநிதி ஒருவர் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜனசேனா கட்சியின் எம்.எல்.ஏ.வாக உள்ள உதய் ஸ்ரீநிவாஸ் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக அமைச்சர் ஏ.வ. வேலு தலைமையிலான குழுவினர் சார்பில் இதற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தது. ஆந்திராவில் ஆட்சி செய்து வரும் சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின், பா.ஜ.க. கூட்டணியில் ஜனசேனா கட்சி அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. ஜனசேனா கட்சியைச் சேர்ந்த பவண் கல்யான் அம்மாநில துணை முதல்வராகவும் பதவி வகித்து வருகிறார். அதே சமயம் தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கூட்டத்தை அக்கட்சி புறக்கணித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.