UP Mayor ordered to demolish meat shops

தமிழ்நாட்டில், பல பகுதிகளில் தெருவில் சுற்றித் திரியும் நாய்கள், குழந்தைகள் உள்பட பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்து வரும் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு முன்னெச்சரிக்கையாக தமிழக அரசு பல்வேறு முன்னேற்பாடுகள் செய்து வருகிறது. இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் நாய்கள் கடித்து சிறுமி ஒருவர் உயிரிழந்ததால், அந்த பகுதியில் உள்ள இறைச்சி கடைகளை மேயர் இடிக்க உத்தரவிட்ட சம்பவம் பெரும் பேசுபொருளாகி உள்ளது.

Advertisment

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் பகுதியில் கடந்த 27ஆம் தேதி சாலையோரத்தில் தாயுடன் இரண்டு சிறுமிகள் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த இரண்டு சிறுமிகளை அங்குள்ள எட்டுக்கும் மேற்பட்ட நாய்கள் கடித்து தாக்கியுள்ளன. இதையடுத்து, தூக்கத்தில் விழித்துக்கொண்ட தாய், தனது இரண்டு மகள்களையும் நாய்கள் தாக்கி கடித்து இழுத்துச் செல்வதை பார்த்து அதிர்ச்சியடைந்து நாய்களை துரத்தியுள்ளார். நாய்கள் தாக்கியதால் படுகாயமடைந்த சிறுமிகளை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இந்த தாக்குதலுக்குள்ளான மற்றொரு சிறுமி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisment

இதையடுத்து, தெரு நாய்கள் தொல்லை குறித்து பலமுறை நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அப்பகுதி மேயர் பிரமிளா பாண்டே நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவர் அப்பகுதியை நேரில் ஆய்வு நடத்தியதையடுத்து, அங்குள்ள இறைச்சி கடைகளில் உள்ள மீதமான இறைச்சி துண்டுகளை தெருநாய்களுக்கு உணவாக கொடுப்பதால் தான் அவை ஆக்ரோஷமாக மாறி தாக்குதலில் ஈடுபடுகிறது என கூறி அங்குள்ள 44 இறைச்சி கடைகளை இடிக்க உத்தரவிட்டார்.

மேயர் பிரமிளா பாண்டேவின் உத்தரவின் பேரில், புல்டோசர்களால் அங்கிருந்த 44 இறைச்சி, மீன் கடைகளை இடித்து தள்ளப்பட்டது. மேலும் அவர், இனி இந்த பகுதிகளில் இறைச்சி கடைகளை அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அங்குள்ள இறைச்சி கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். இறைச்சி கடைகளை இடித்து தள்ளிய மேயரின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment