Skip to main content

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு விவகாரம்;  ஒலிம்பிக் சங்கத்திற்கு மத்திய அமைச்சர் கடிதம்

Published on 24/12/2023 | Edited on 24/12/2023
In the matter of Wrestling Federation of India; Union Minister letter to Olympic Association

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்தவர் ஒலிம்பிக் மல்யுத்த பதக்க வீரரான சாக்‌ஷி மாலிக். பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்கள், போராட்டத்திற்குப் பிறகு பிரிஜ் பூஷண் தலைமைப் பதவியிலிருந்து விலகிவிட்ட நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு கடந்த 20 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பிரிஜ் பூஷணின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான சஞ்சய் சிங் என்பவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மொத்தமுள்ள 15 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சஞ்சய் சிங் அணியினர் 13 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இது மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோருக்கு பெரும் கவலையை ஏற்படுத்திய நிலையில், மல்யுத்த விளையாட்டிலிருந்து தான் விலகுவதாக சாக்‌ஷி மாலிக் அதிரடியாக அறிவித்திருந்தார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சாக்‌ஷி மாலிக், இதயத்திலிருந்து தான் போராடியதாகவும் ஆனால் பிரிஜ் பூஷண் போன்ற ஒருவரான சஞ்சய் சிங் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாகத் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு பிரிஜ் பூஷண ஆதரவாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண மீதான பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காததால் மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருதை பிரதமர் மோடியிடம் திருப்பி அளிப்பதாக நேற்று முன்தினம் (22-12-23) மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவித்திருந்தார். மேலும் இது தொடர்பான சர்ச்சைகள் வெடித்த நிலையில் பிரிஜ் பூஷண் ஆதரவாளர்கள் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.  இந்நிலையில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வாகிக்க தற்காலிக குழுவை அமைக்கக் கோரி மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.  அந்த கடிதத்தில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்கவும், கட்டுப்படுத்தவும் தற்காலிக குழு அமைக்க வேண்டும். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தொடர்ச்சியாக நடந்து வரும் சர்ச்சைகளுக்கு முடிவு காண வேண்டும் என தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.