
கர்நாடகா மாநிலத்தில் கடலோர பகுதியில் அமைந்துள்ள மங்களூருவில் கடந்த 19/11/2022 அன்று மாலை ஒரு ஆட்டோ திடீரென வெடித்துச் சிதறியது. ஆட்டோவில் இருந்த இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் எப்படி நடந்தது? யார் காரணம்? என்பது தொடர்பாக, கர்நாடக மாநில காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில், வெடித்தது குக்கர் வெடிகுண்டு என்பது தெரிய வந்தது. இதில் தேசிய அளவிலான சதி இருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகங்கள் எழுந்த நிலையில், தேசிய புலனாய்வுத் துறையின் அதிகாரிகளும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியான முகமது ஷெரீக் என்பவரின் மீதுள்ள பழைய வழக்குகள் தொடர்பான முதல் தகவல் அறிக்கையை என்.ஐ.ஏ வெளியிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் ஒரு வீட்டில் வெடிகுண்டு தயாரிப்பதற்காக வெடி பொருட்களை வாங்கி பதுக்கி வைத்திருந்தது, அதேபோல் தேசியக் கொடியை எரித்தது, நாட்டுக்கு எதிரான பல்வேறு வாசகங்கள் அடங்கிய குறிப்புகளை வைத்திருந்தது என பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு ஏற்கனவே கர்நாடக காவல்துறை ஷெரீக் மீது வழக்குப்பதிவு செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு என்.ஐ.ஏவிற்கு மாற்றப்பட்டு கடந்த வாரம் 15 ஆம் தேதி முதல் குற்றவாளியாக முகமது ஷெரீக்கை சேர்த்து டெல்லியில் இருக்கக்கூடிய தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து தேடி வந்தது. இந்நிலையில்தான் கடந்த 19ஆம் தேதி இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.