முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய பா.ஜ.க எம்.பி.யுமான மேனகா காந்தி, விலங்குகள் நலன் தொடர்பான பிரச்சனைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்து வருகிறார். இவர், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் எனும் இஸ்கான் நிறுவனம், மாடுகளை இறைச்சிக்கு விற்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இவர் பேசியது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த இஸ்கான் அமைப்பானது இந்தியாவை பொதுத் தளமாகக் கொண்டு உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் கீழ் நூற்றுக்கணக்கான கோவில்கள், பசு பராமரிப்பு கூடங்கள் ஆகியவை இயங்கி வருகின்றன. இந்த நிலையில், பா.ஜ.க எம்.பி. மேனகா காந்தி இஸ்கான் அமைப்பிற்கு எதிராக குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது தொடர்பான வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, “இந்தியாவில் மிகப்பெரிய ஏமாற்று நிறுவனமாக இஸ்கான் நிறுவனம் இருக்கிறது. பசு மாடுகளை வளர்க்கும் கோசாலைகளை நடத்துவதன் மூலம் இந்த அமைப்பு, பரந்த நிலப்பரப்புகளைக் கொண்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், அரசாங்கத்திடமிருந்து ஏராளமான பலன்களைப் பெற்று வருகிறது.
ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தப்பூரில் இஸ்கான் அமைப்பினர் நடத்தி வரும் பசுக் கூடத்திற்கு நான் ஒருமுறை சென்றிருந்தேன். அங்கு பால் தராத பசுமாடுகள், கன்றுக்குட்டிகள் என ஒன்றுமே இல்லை. அப்படியென்றால் அனைத்தையும் விற்று விட்டார்கள் என்றுதான் அர்த்தம். இஸ்கான் நிறுவனம், இறைச்சிக்கு மாடுகளை விற்பனை செய்கிறது. சாலைகளில் ‘ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா’ என்று பாடிக்கொண்டே செல்கிறார்கள். அதோடு பசுவின் பாலையே தங்களது வாழ்நாள் முழுவதும் நம்பி இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் அளவுக்கு வேறு யாரும் மாடுகளை கறிக்கடைகளுக்கு அனுப்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேனகா காந்தியின் குற்றச்சாட்டிற்கு இஸ்கான் அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகில் உள்ள பல பகுதிகளில் பசு பாதுகாப்பில் இஸ்கான் அமைப்பு ஒரு முன்னோடியாக இருக்கிறது. இந்தியாவில் 60க்கும் மேற்பட்ட மாட்டுத் தொழுவங்களை இஸ்கான் அமைப்பு நிர்வகித்து வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான பசுக்கள் மற்றும் காளை மாடுகளும் பாதுகாப்போடு பராமரிக்கப்பட்டு வருகிறது. கைவிடப்பட்ட, காயமடைந்த அல்லது வெட்டப்படுவதற்கு முன் காப்பாற்றப்பட்ட பல பசுக்கள் தான் தற்போது தமது மாட்டுத் தொழுவங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது” என்று இஸ்கான் தெரிவித்துள்ளது.