கர்நாடகா மாநிலம் பெங்களூர் நகரில் உள்ள வாய்க்காலில் ஒரு பெண்ணின் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதனை கண்ட அந்த பகுதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் அந்த பெண்ணின் பெயர் ருமேஷ் காதுன் (22) என்பது தெரியவந்தது.
இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில், அப்பெண்ணின் கணவர் காணவில்லை என்பது அவர் தனது ஆறு குழந்தைகளுடன் அங்கிருந்து தப்பிச் சென்றிருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் மொபைல் போன் எண்ணை வைத்து பெண்ணின் கணவரின் இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். அதில், அவர் பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் பகுதியில் இருப்பதை தெரிந்துகொண்ட போலீசார், அங்கு சென்று அவரை பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது நசீம் (39) என்பது தெரிந்தது. பெயிண்டராக வேலை பார்க்கும் இவருடைய முதல் திருமணத்தில் 4 குழந்தை இருக்கிறது. இதனையடுத்து, ருமேஷ் காதுன்(22) என்ற பெண்ணை அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். முகமது நசீமுக்கும், ருமேஷ் காதுனுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், முகமது நசீமுக்கு, ருமேஷ் காதுனுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் தனது மனைவி மீது சந்தேகமடைந்த முகமது நசீம், தனது இரண்டாவது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்று, கை கால்களை கம்பியால் கட்டி உடலை, பெங்களூர் நகரின் சர்ஜாபூர் பகுதியில் உள்ள வாய்க்காலில் வீசியுள்ளார். அதன் பிறகு, தனது 6 குழந்தைகளை அழைத்துச் சென்று பீகாரில் உள்ள சொந்த கிராமமான முசாபர்பூருக்கு தப்பிச் சென்றுள்ளார். அதன் பிறகு, அவர் வேறு ஒரு பெண்ணுடன் மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, முகமது நசீம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து முசாபர்பூரில் இருந்து வரவழைக்கப்பட்டு கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.