அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட நாளிலேயே இந்தியா உண்மையான சுதந்திரம் பெற்றது என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறியதாவது, “ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியா ஆங்கிலேயர்களிடமிருந்து அரசியல் சுதந்திரம் பெற்ற பிறகு, அந்த குறிப்பிட்ட தொலைநோக்குப் பார்வை காட்டிய பாதையின்படி ஒரு எழுதப்பட்ட அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. அது நாட்டின் சுயத்திலிருந்து வெளிப்படுகிறது. ஆனால் அந்த நேரத்தில் அந்த தொலைநோக்குப் பார்வையின் உணர்வின்படி ஆவணம் செயல்படுத்தப்படவில்லை.
அதனால், பல நூற்றாண்டுகளாக எதிரிகளால் தாக்கப்பட்டு இந்தியா உண்மையான சுதந்திரம் பெற்ற நாளான ராமர் கோயில் கட்டப்பட நாளில் ‘பிரதிஷ்டா துவாதசி’ கொண்டாடப்பட வேண்டும்” என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, “இது தேச விரோதமானது. இந்த ஆபத்தான கருத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இதைத் திரும்பப் பெற வேண்டும். இது வரலாற்றைத் திரிக்கும் முயற்சி. நமது சுதந்திரத்தை அப்படியே வைத்திருக்க நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். மேலும் இந்தியாவுக்காக எங்கள் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால் இதைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.