Mamata Banerjee alleges on Congress has secret alliance with BJP in West Bengal

2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர். அதில், பீகார் மாநிலம் பாட்னாவில் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து, பெங்களூர், மும்பை என அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Advertisment

இதனையடுத்து இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனைக் கூட்டம் (19/12/2023) டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவத் சிங் மான், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி, சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

Advertisment

இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வும் காங்கிரஸும் ரகசிய தொடர்பு உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து கட்சித் தொண்டர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “எதிர்க்கட்சிகள் அனைவரும் திருடர்கள் என்று முத்திரை குத்த பா.ஜ.க முயல்கிறது. நாட்டின் ஜனநாயகத்தை மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் முறியடிக்க முயற்சித்து வருகிறது. மேற்கு வங்கத்தில் காங்கிரஸும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பா.ஜ.க.வுடன் ரகசிய கூட்டணி அமைத்து நமது கட்சிக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. மேற்கு வங்கத்தை பொறுத்தவரையில் திரிணாமுல் காங்கிரஸ் மட்டும் பா.ஜ.கவுக்கு எதிராகப் போராடி வருகிறது. மக்களவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மட்டும் பா.ஜ.கவை எதிர்த்து நிற்கும்” என்று கூறினார்.