Skip to main content

தொடர் போராட்டம் நடத்திய மருத்துவர்கள்; கோரிக்கையை ஏற்று இறங்கி வந்த மம்தா பானர்ஜி!

Published on 17/09/2024 | Edited on 17/09/2024
Mamata Banerjee accept the Doctors request in west bengal

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த 8ஆம் தேதி (08.08.2024) பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே சமயம் மருத்துவ மாணவியின் கொலை சம்பவத்தைக் கண்டித்தும், கொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும் நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து பெண் மருத்துவர் கொலைத் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து, பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதே சமயத்தில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிஐ, சந்தீப் கோஷ் உள்பட பலரிடம் விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையின் போது, மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் வாங்குவதில் மருத்துவமனை முதல்வராக இருந்த போது சந்தீப் கோஷ் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததன் பேரில் சிபிஐ அதிகாரிகள்  அவரை கடந்த 3ஆம் தேதி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கை நடத்திய தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டலையும் சி.பி.ஐ கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இத்தகைய சூழலில், மருத்துவர்களின் பொதுக்குழு கூட்டத்தில், 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  அதில், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும், கொல்கத்தா காவல் ஆணையாளர் சுனீத் கோயல், சுகாதார துறையின் முதன்மை செயலாளர் நாராயன் ஸ்வருப் நிகாம் மற்றும் அவருடைய 2 உதவி அலுவலர்கள் ஆகியொர் பதவி விலக வேண்டும் உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவர்களுடைய கோரிக்கையை மாநில அரசு ஒப்புக்கொள்ளாததால், மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு, போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களிடம் நடத்திய 4 கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, 5வது பேச்சுவார்த்தையில் மருத்துவர்கள் வைத்த பெரும்பாலான கோரிக்கைகளை மம்தா பானர்ஜி ஏற்றுக்கொண்டுள்ளார். 

அதன்படி, கொல்கத்தா காவல் ஆணையர் வினீத் கோயல், கொல்கத்தா வடக்கு துணை ஆணையர் அபிஷேக் குப்தா, இரண்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோரை பதவியில் இருந்து நீக்க முதல்வர் மம்தா பானர்ஜி சம்மதம் தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை போராட்டம் தொடரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால், கூடிய விரைவில் மருத்துவர்கள் போராட்டம் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்