Mallikarjuna Kharge says Union Home Minister should explain about Trespass in Lok Sabha;

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரானது வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக்கூட்டத்தொடரில் ஆளும் பா.ஜ.க எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் காரசாரமாக விவாதித்து வந்தனர். அப்போது, யாரும் எதிர்பாராதவிதமாக இரண்டு நபர்கள் திடீரென அத்துமீறி மக்களவைப் பகுதியில் நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் அலுவல்கள் இன்று (13-12-23) வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் திருமண கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் வண்ண புகையை உமிழும் பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து அவை முழுக்க வீசியதாகக் கூறப்படுகிறது. மேலும், 'சர்வாதிகாரம் கூடாது' என அந்த இருவரும் முழக்கங்களை எழுப்பியபடி, அவைக்குள் தாவிக் குதித்து தப்பியோட முயன்றனர்.

அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த பாதுகாவலர்களும் அங்கிருந்த எம்பிக்களும் சுற்றி வளைத்து அந்த இரு நபர்களையும் பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடைபெற்றுவருகிறது. நாடாளுமன்றத்தாக்குதல் நினைவு தினமான இன்று இருவர் அத்துமீறி நுழைந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

இதையடுத்து, மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். நாடாளுமன்றம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அதற்குப் பதில் அளித்துப் பேசிய பா.ஜ.க எம்.பி. பியூஸ் கோயல், “மாநிலங்களவை மூத்தவர்கள் சபை என்று நான் நினைக்கிறேன். இதையெல்லாம் விட இந்த நாடு பலம் வாய்ந்தது என்ற செய்தியை நாம் கொடுக்க வேண்டும். எனவே, அவை நடவடிக்கைகள் தொடர வேண்டும். காங்கிரஸ் இதை அரசியலாக்குகிறது. இது நாட்டுக்கு நல்ல செய்தியல்ல” என்று பேசினார்.

அதன் பின்னர், இது குறித்துப் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “மக்களவையில் இருவர் அத்துமீறி நுழைந்தது மிகவும் தீவிரமான பிரச்சனை. இது வெறும் மக்களவை, மாநிலங்களவை பற்றியது அல்ல. இவ்வளவு பாதுகாப்பையும் மீறிஎப்படி இருவர் உள்ளே நுழைய முடியும்? எனவே, அவையை ஒத்திவைக்க கேட்டுக்கொள்கிறோம். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்து இதுகுறித்து விளக்கம் தர வேண்டும். இந்த சம்பவத்தை அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ளும் என்று நம்புகிறோம். மேலும், இந்த தவறு குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கோருகிறோம். நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.” என்று கூறினார்.