Skip to main content

அவருக்கு படுக்கை கொடுங்கள்; இல்லையென்றால் ஊசிபோட்டு கொன்றுவிடுங்கள் - தந்தைக்காக கதறிய மகன்!

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

sagar kishor

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி ஒருலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது தினசரி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

இதனால் மஹாராஷ்ட்ரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், கரோனா பாதிக்கப்பட்டவர்களை அனுமதிக்க படுக்கை வசதியில்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கரோனா பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனைக்கு வெளியேயே சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மற்றும் வாகனங்களில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. 

 

இவ்வாறு சிகிச்சைக்காக காத்திருக்கும் ஒருவரின் மகன், ‘படுக்கையைத் தாருங்கள் அல்லது தந்தையைக் கொன்றுவிடுங்கள்’ என கதறிய நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சாகர் கிஷோர் நஹர்ஷெடிவர் என்பவரின் தந்தை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. சாகர் கிஷோர், தனது தந்தையை மருத்துவமனையில் அனுமதிக்க முயன்றுள்ளார். ஆனால் பல மருத்துவமனைகளுக்குச் சென்றும், படுக்கை வசதி இல்லாததால் அவரது தந்தைக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனையடுத்து அவர், தந்தையை தெலங்கானாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கும் மருத்துவமனைகளில் இடமில்லை.

 

இதனையடுத்து அவர், தனது தந்தையை அழைத்துக்கொண்டு மஹாராஷ்ட்ராவிற்கே திரும்பியுள்ளார். அப்போதும் மருத்துவமனையில் இடம் கிடைக்கவில்லை. 24 மணி நேரத்திற்குள் இரண்டு மாநிலங்கள் சுற்றியும் அவரது தந்தைக்கு மருத்துவமனையில் அனுமதி கிடைக்காத நிலையில், ஆம்புலன்ஸில் அவரது தந்தைக்கு வழங்கப்பட்டுக்கொண்டிருந்த ஆக்சிஜன் அளவும் குறைந்துகொண்டே வந்துள்ளது.

 

இந்தநிலையில், மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்த அவரிடம் ஊடகம் ஒன்று பேசியுள்ளது. அப்போது அவர் "அவருக்குப் படுக்கை ஒன்றை ஏற்பாடு செய்யுங்கள் அல்லது ஊசி போட்டுக் கொன்றுவிடுங்கள். என்னால் அவரை இந்த நிலைமையில் வீட்டுக்கு அழைத்துச் செல்ல இயலாது. உங்களிடம் படுக்கைகளும் இல்லை" என தெரிவித்தார். அவர் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருவதோடு, பலரையும் உலுக்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வங்கி மோசடி புகார்; அஜித் பவார் மனைவி மீதான வழக்கு மூடிவைப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Closing the case against Ajitpawar's wife on Complaint of bank fraud

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. அதன்படி, மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஏற்கனவே முதற்கட்டமாக மகாராஷ்டிராவில் 5 தொகுதிகளுக்கு கடந்த 19ஆம் தேதி நடத்தப்பட்டது. இதனையடுத்து, மீதமுள்ள 8 தொகுதிகளுக்கு வரும் 26ஆம் தேதி அன்று இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாய் நடைபெற்ற வந்த நிலையில், இன்று (24-04-24) மாலை தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. 

மகாராஸ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அக்கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஸ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக்கொண்டனர். துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதி மற்றும் திட்டமிடல் துறை வழங்கப்பட்டது. அதேபோல், அவரது அணியைச் சேர்ந்த 8 அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.

தேசியவாத காங்கிரசில் பிளவு ஏற்பட்ட நிலையில் தங்களுக்கே கட்சி சொந்தம் எனத் தேர்தல் ஆணையத்தில் சரத்பவார், அஜித் பவார் தரப்பில் முறையிடப்பட்டது. இதனையடுத்து, அஜித் பவார் தலைமையிலான கட்சியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் எனத் தேர்தல் ஆணையம் அங்கிகரித்துள்ளது. அதேபோல் கட்சியின் கடிகாரம் சின்னத்தை அஜித்பவார் பயன்படுத்திக் கொள்ளவும் எனவும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதே வேளையில், நடைபெறவிருக்கிற மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரா, பாராமதி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க கூட்டணியில் இருக்கிற அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளராக அம்மாநில துணை முதல்வர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் போட்டியிடுகிறார். இதற்கிடையே, ரூ.25,000 கோடி கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில், அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கை குற்றப்பிரிவு காவல்துறை நடத்தி வந்தது. இந்நிலையில், வங்கி மோசடி வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சுனேத்ரா பவார் மீது எந்தவித ஆதாரம் இல்லை என்றும், அவர் மீது குற்றமில்லை என்றும் வங்கிகளுக்கு பணம் இழப்பே இல்லை எனவும் மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை அறிக்கை சமர்பித்து வழக்கை மூடியுள்ளது. 

Next Story

 உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
happened to the young man on Treatment to reduce obesity in puducherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் நேற்று முன் தினம் (22-04-24) அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.