Mahua Moitra says They are preventing me from speaking to cover up the Adani scam

Advertisment

மேற்கு வங்க எம்.பி. மஹுவா மொய்த்ரா, அதானி குழுமம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தனியிடம் லஞ்சம் பெற்றதாக பா.ஜ.க எம்.பி. நிஷாகாந்த் துபே குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து அவர், கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில், “மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்கு தொழிலதிபரான ஹிரானந்தனிடம் இருந்து பணம் பெற்றுள்ளார். மொய்த்ராவின் கேள்விகள் அனைத்தும் ஹிரானந்தனி நலனுக்காகத்தான் இருந்திருக்கிறது.

இதற்காக 2 கோடி பணம் மற்றும் விலை உயர்ந்த ஐ ஃபோன் போன்ற பரிசுப் பொருட்களை ஹிரானந்தனி நிறுவனம் மொய்த்ராவுக்கு தந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், தேர்தலில் போட்டியிடுவதற்காக ரூ. 75 லட்சம் மொய்த்ராவுக்கு, ஹிரானந்தனி நிறுவனம் கொடுத்துள்ளது. கடந்த 2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் மொய்த்ரா நாடாளுமன்றத்தில் 61 கேள்விகள்கேட்டுள்ளார். அதில் 50 கேள்விகள் தர்ஷன் ஹிரானந்தனிக்கு சாதகமான கேள்விகளே கேட்கப்பட்டுள்ளது. எனவே, அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, பா.ஜ.க எம்.பி. வைத்த குற்றச்சாட்டுகளை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மொய்த்ரா திட்டவட்டமாக மறுத்திருந்தார். இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற நன்னடத்தைக் குழு விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் நன்னடத்தைக் குழுவில் இடம்பெற்றுள்ள 10 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 6 பேர் மஹுவா மொய்த்ராவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பான நாடாளுமன்ற நன்னடத்தைக் குழுவின் அறிக்கையை மக்களவை சபாநாயகரிடம் நேற்று (10.11.2023) அளித்தனர். நன்னடத்தை குழுவினர்சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரையின் அடிப்படையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அதானி குழுமம் ரூ.1300 கோடி நிலக்கரி ஊழலில் ஈடுபட்டுள்ளது. இதை பற்றி கேள்வி கேட்ட என் மீது லஞ்சப் புகார் கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க மக்களவை நெறிமுறை குழு பரிந்துரைத்துள்ளது. அதானி ஊழலை மறைக்க என்னை பேசவிடாமல் பதவியை பறிக்க முயற்சிக்கிறார்கள். மோடியும், அதானியும் தான் அரசை வழிநடத்துகிறார்கள். அவர்கள் பற்றி யாரேனும் கேள்வி கேட்டால் உடனே அவர்களை வெளியேற்றி விடுகிறார்கள்” என்று கூறினார்.