Skip to main content

பிறந்தநாளுக்கு துபாய் கூட்டிச் செல்லாத கணவர்! - அடித்துக் கொன்ற மனைவி! 

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

Maharashtra woman Renuka Kahanna arrested in Nikihil Kahnnaa passes away case

 

மஹாராஷ்டிரா மாநிலம், புனே பகுதியைச் சேர்ந்தவர் நிகில் கண்ணா (36). கட்டட பொறியாளரான இவர், ரேணுகா ஜாகர் கண்ணா(38) என்பவரைக் காதலித்து கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும், புனே வான்வாடி எனும் பகுதியில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே அவ்வப்பொழுது தகராறு ஏற்படுவது வழக்கம். அப்பொழுதெல்லாம், நிகில் கண்ணாவின் தந்தையும் மருத்துவருமான புஷ்பராஜ் கண்ணா வந்து சமாதானம் செய்து வந்துள்ளார். 

 

இந்நிலையில், நேற்று (24ம் தேதி) ரேணுகா, நிகிலின் தந்தை புஷ்பராஜ்க்கு போன் செய்து அவருக்கும் தன் கணவருக்கும் இடையே சண்டை எனவும் அதன் காரணமாக வீட்டிற்கு வாருங்கள் எனவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து புஷ்பராஜ், உடனடியாக கிளம்பி தன் மகன் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவர் காரை நிறுத்தியபோது, மீண்டும் போன் செய்த ரேணுகா, ‘அவசரம், சீக்கிரம் வாங்கள்’ எனச் சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்துள்ளார். இதனால், பதறிப் போன புஷ்பராஜ், விறுவிறுவென அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள தனது மகன் வீட்டிற்கு ஓடியுள்ளார். அங்கு சென்று தன் மகன் வீட்டிற்குள் நுழைந்தபோது, அவரது மகன் நிகில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து வீழ்ந்து கிடந்துள்ளார். இதனைக் கண்டு பதறிப்போன புஷ்பராஜ், உடனடியாக மகனை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், நிகில் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். 

 

Maharashtra woman Renuka Kahanna arrested in Nikihil Kahnnaa passes away case

 

இதனைத் தொடர்ந்து இந்தத் தகவல் வான்வாடி போலீஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு விரைந்த போலீஸார் நிகில் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். மேலும், நிகிலின் தந்தை புஷ்பராஜ், தனது மகனை அவரது மனைவிதான் கொலை செய்திருக்க வேண்டும் எனப் போலீஸில் புகார் அளித்துள்ளார். 

 

அந்தப் புகாரில், 2017ம் ஆண்டு என் மகனும் ரேணுகாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்குத் திருமணம் நடந்த சில மாதங்களில் இருந்தே இருவருக்கும் இடையே சண்டை வரும். அப்பொழுதெல்லாம்  நான் வந்து அவர்களை சமாதானம் செய்து வைத்துவிட்டுச் செல்வேன். 

 

கடந்த செப்.18ம் தேதி ரேணுகாவின் பிறந்தநாள் வந்தது. அதற்கு அவர் என் மகனை துபாய்க்கு அழைத்து செல்ல வற்புறுத்தியுள்ளார். ஆனால், அவர்கள் துபாய்க்கு செல்ல முடியாமல் போயுள்ளது. இதனால் என் மகன் நிகில் மீது ரேணுகாவுக்கு கோவம். அதுமட்டுமல்லாமல், நவ.5ம் தேதி அவர்களது திருமண நாள் அன்றும் நிகில், ரேணுகாவுக்கு பரிசு பொருட்களை வழங்கவில்லை எனும் கோவம் இருந்தது. இதனால் அவர்களுக்குள் சமீபகாலமாக அடிக்கடி சண்டை வந்தது. ரேணுகாவின் உறவினர்கள் வீட்டு விஷேசத்திற்கு அவரை டெல்லி அழைத்து செல்லாததும் அவருக்கு நிகில் மீது கோவம் இருந்தது. இதன் காரணமாகவே, நிகிலை ரேணுகா தாக்கியுள்ளார். அதில் என் மகன் இறந்துள்ளார்’ எனத் தெரிவித்துள்ளார். 

 

Maharashtra woman Renuka Kahanna arrested in Nikihil Kahnnaa passes away case

 

இந்தப் புகாரைக் கொண்டு போலீஸார் ரேணுகா மீது ஐ.பி.சி. 302-ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், போலீஸார் தரப்பில் இருந்து தெரிவிக்கும்போது, நிகிலுக்கும் ரேணுகாவுக்கும் இடையே நேற்று (24ம் தேதி) இரவு வாய் தகராறு நடந்ததுள்ளது. அதில், ஆத்திரம் அடைந்த ரேணுகா நிகில் மூக்கின் மீது குத்தியுள்ளார். இதில் அவரது மூக்கும் சில பற்களும் உடைந்துள்ளது. மூக்கு உடைந்ததால், அவரது சுவாசம் நின்று மரணித்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மூக்கும், பற்களும் உடையும் அளவிற்கு ரேணுகா கையால்தான் தாக்கினாரா அல்லது வேறு ஏதேனும் பொருள் கொண்டு தாக்கினாரா என்பது தெரியவில்லை. தற்போது ரேணுகா சிறையில் உள்ளார். அவரிடம் முழு விசாரணை முடிந்த பிறகும், நிகிலின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகுமே கொலைக்கான காரணமும், ரேணுகா நிகிலை கையால்தான் அடித்தாரா அல்லது வேறு ஏதேனும் பொருளைக் கொண்டு தாக்கினாரா என்பது குறித்த விவரங்கள் தெரியவரும் என்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தி.மு.க. பிரமுகர் மீது கொடூரத் தாக்குதல்!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
Chengalpattu Katangulathur dmk executive incident

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராக இருந்து வருபவர் ஆராவமுதன். இவர் மீது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று நாட்டு வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டியுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஆராவமுதனின் கை மற்றும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அதே சமயம் படுகாயம் அடைந்த ஆராவமுதன் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். நாட்டு வெடிகுண்டு வீசி தி.மு.க நிர்வாகி அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

‘துரித நடவடிக்கை’- முதல்வருக்கு தருமபுரம் ஆதீனம் நன்றி!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
Urgent Action Thanks to the CM Darumapuram Atheenam
கோப்புப்படம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27வது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்த சூழலில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அந்த புகாரில் தெரிவித்திருப்பதாவது, ‘தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாக மிரட்டினர். மேலும், அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் என்று கூறி என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்தனர். இந்த சம்பவத்தில் செம்பனார்கோவிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க. கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மயிலாடுதுறை பா.ஜ.க மாவட்டத் தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அதிரடியாக நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில் போலி ஆபாச வீடியோ விவகாரத்தில் பாஜக நிர்வாகிகள் மீது மிகத் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், காவல்துறைக்கும் தருமபுரம் ஆதீனம் சார்பில் நன்றி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தருமபுரம் ஆதீனம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில நாட்களாக தருமபுர மடத்தில் சில அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் சில ரவுடிகள் சேர்ந்து மடத்தின் சம்பந்தமான போலியான ஆடியோ மற்றும் வீடியோ டேப்களை தயாரித்து மடத்தில் வேலை செய்பவர்களையும், மடத்தின் விசுவாசிகளையும் அணுகி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்தனர். இதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என நாங்கள் காவல்துறையை நாடினோம். காவல்துறை தமிழக முதல்வரின் ஆணைப்படி இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மிகத் துரிதமாக சட்டப்படியான நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, மிகத் துரிதமாக நடவடிக்கை எடுத்து எங்களையும் எங்கள் மடத்தின் பெருமையையும் காத்த காவல்துறைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தருமபுர மடத்தையும் எங்களையும் ரவுடிகளிடமிருந்து மீட்டெடுத்த தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.