Skip to main content

"நாம் மேலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்"- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

Published on 31/05/2020 | Edited on 31/05/2020

 

maankibaat pm narendra modi speech


மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "பொது முடக்கம் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டு வரும் நிலையில் நாம் மேலும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். இந்தியா எப்படி இதை சாதித்தது என்பதைத்தான் உலகமே உற்றுநோக்கியுள்ளது. மக்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தால்தான் வைரஸில் இருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும். கரோனாவுக்கு எதிரான போரை மிகவும் வலுவுடன் இந்திய மக்கள் போராடி வருகின்றனர். இந்திய மக்களின் சேவை மனப்பான்மை காரணமாகவே இந்த போரில் வலுவுடன் போராட முடிகிறது. மற்ற நாடுகளைவிட இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு குறைவாகவே உள்ளது. மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள், போலீசார், தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டுக்கள்.


மதுரையில் சலூன் நடத்தும் மோகன் தனது மகனின் படிப்பு செலவுக்காக வைத்திருந்த ரூபாய் 5 லட்சத்தை ஏழைகளுக்கு தந்தார். தனது வருமானம் முழுவதையும் மக்களுக்காக செலவிடும் மோகனுக்கு பாராட்டுக்கள். இச்சூழலில் கல்வி கற்பித்தலில் ஆசிரியர்கள், மாணவர்கள் புதிய தலைமுறையை கண்டுபிடித்தது மகிழ்ச்சி தருகிறது. ஏழைகள் மற்றும் தொழிலாளர்களே கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சனையைச் சந்திக்கின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் நலனுக்காக தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா தனது சுய சக்தியில் செயல்படும்போது பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்படும். யோகா, ஆயுர்வேதத்தை கரோனாவுக்கு எதிராக எவ்வாறு பயன்படுத்தலாம் என உலகத்தலைவர்கள் என்னிடம் கேட்டனர். யோகா, ஆயுர்வேதத்தை மக்கள் தினசரி செய்ய தொடங்கியதைப் பார்க்க முடிகிறது. 

யோகாசனம் மூலம் சுவாச பயிற்சி மேற்கொள்ளும் காணொளி தயாரிப்பு போட்டியில் அனைவரும் பங்கேற்கலாம். யோகாசனம் செய்யும் வீடியோவை போட்டி தளத்தில் பதிவிடலாம். புதுச்சேரியைச் சேர்ந்த ஜீவா என்பவர் இருதய பிரச்சனையில் இருந்து குணமடைய ஆயுஷ்மான் பாரத் திட்டமே காரணம். சிகிச்சைக்கான பண வசதி ஜீவாவிடம் இல்லாததால் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பலன் கிடைத்தது. வெட்டுக்கிளி தாக்கத்தில் இருந்து விவசாயிகளை காக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெட்டுக்கிளி பிரச்சனை விவசாயிகளை பாதிக்காமல் காக்க புதிய உத்திகள், முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. 


நீர்நிலைகளை பாதுகாத்து சுத்தமாக வைத்திருப்பதை பொதுமக்கள் உறுதிப்படுத்த வேண்டும். பழமையான முறைகள் மூலம் எளிமையாக மழைநீர் சேமிப்பு திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். அனைவரும் மரங்களை நடவேண்டும்; கோடைகாலத்தில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க வேண்டும்." இவ்வாறு பிரதமர் பேசினார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

'இவர்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பதே போதுமானது'' - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு 

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

"It is enough that the Dharmapura Adheena Kurumaka Sannithans support us" - Principal M.K.Stal's speech

 

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் 75 வது பவளவிழாவின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் பேசிய தமிழக முதல்வர், 'ஆலயங்களில் அன்னைத் தமிழ்; மூவாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கோயில் நகைகள் மீட்பு; அறநிலையத்துறை சார்பில் 10 கலை கல்லூரிகள்; கோவில் திருப்பணிகளை ஒருங்கிணைக்க குழு; இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள பழமையான கோவில்களை பழமை மாறாமல் சீர் செய்து குடமுழுக்கு நடத்த உத்தரவு; திருக்கோவில் பணிகள் மேற்கொள்ள மண்டல மாநில அளவிலான வல்லுநர் குழு; தற்போது வரை 3,986 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக வல்லுநர் குழுவால் அனுமதி; ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான வரலாற்று சிறப்புமிக்க நூற்றுப் பன்னிரண்டு திருக்கோவில்களை பழமை மாறாமல் சீர் செய்ய 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு என இந்த நிதியாண்டில் மட்டும் 5,078 திருக்கோவில்களின் திருப்பணிகள் மூலம் இந்து சமய அறநிலையத்துறையைக் காத்து வரும் ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி. இதனை மக்கள் அறிவார்கள். அறிவது மட்டுமல்ல வாழ்த்திக்கொண்டும் இருக்கிறார்கள்.

 

நீதிபதிகளே அறநிலையத்துறைக்கு நாம் ஆற்றும் பணிகளைப் பார்த்து வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மொழி, தமிழர்கள், தமிழ்நாடு என்ற மாநிலம் காப்பாற்றப்பட வேண்டும். வீர முத்துவேல் போன்ற அறிவியலாளர்களை எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும். அனைவரும் தமிழ்த்தாயின் பிள்ளைகள் என்ற நோக்கத்தோடு செயல்படுவதற்கான உணர்வை தர வேண்டும். மாணவர்களின் பசியாற்றும் காலை உணவுத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. அப்படி விரிவாக்கம் செய்யப்படக்கூடிய திட்டத்தை கலைஞர் படித்த திருக்குவளை பள்ளியில் இருந்து நான் தொடங்கி வைத்திருக்கிறேன். 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரின் ஏக்கத்தைப் போக்கும் வகையிலான மக்களுக்கான திட்டம் தான் காலை உணவுத் திட்டம். அனைத்து நன்மைகளும் அனைவருக்கும் கிடைக்கக் கூடாது என்ற ஒரு கூட்டம் தான் எங்களுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபடுகிறது. அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. தர்மபுர ஆதீனம் போன்ற நல்லிணக்கத்தை விரும்பும் சகோதரத்துவத்தை விரும்பும் குருமகா சன்னிதானங்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பதே எங்களுக்குப் போதுமானது'' என்றார்.