/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/eci-chief-com-art_0.jpg)
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இந்நிலையில், தேர்தல் நேரத்தில் மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து இந்தியத்தலைமைத்தேர்தல் ஆணையருக்கு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் என 87 பேர் சார்பில் கூட்டாக கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தலைமைத்தேர்தல் ஆணையருக்கு எழுதிய கடிதத்தில், “எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மத்திய அரசை கண்டு தேர்தல் ஆணையம் மவுனமாக இருக்கக்கூடாது. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 324 ஆவது பிரிவின்படி வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர் மற்றும் சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தேர்தல் ஆணையம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். மத்திய அரசை போல மாநில அரசும் தங்கள் விசாரணை அமைப்புகளை பயன்படுத்தினால் இத்தககைய செயல் அராஜகத்தில் முடியும். இதுதேர்தல் நேரத்தில் பெரும் குழப்பங்களை விளைவிக்கும்.
ஊழலை ஒழிப்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே சமயம் தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியினரை மத்திய அரசு பழிவாங்குவது தவறு. இது குறித்து தேர்தல் ஆணையம் தங்கள் கடமையை மறந்து உடனடியாக நடவடிக்கை எடுக்காதது ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றி எழுப்பிய சந்தேகங்களை போக்க தேர்தல் ஆணையம் எந்த முயற்சியும் இதுவரை எடுக்கவில்லை. பாஜகவினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதில் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது” எனத் தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)