லாலு பிரசாத் யாதவ் தனது மகனின் திருமணத்தை முன்னிட்டு, சிறையில் இருந்து ஐந்து நாட்கள் பரோலில் வெளிவருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், அவரது ஆட்சிக்காலத்தில் மாட்டுத்தீவண ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார். இதுதொடர்பான வழக்குகளில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என ராஞ்சி சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், லாலு சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலு, உடல்நலக்கோளாறு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவனையில் சிகிச்சையளிக்கப்பட்டு, பின் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில், லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சந்திரிகா பிரசாத் ராய் என்பவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ராய் உடன் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நிச்சயம் செய்யப்பட்டது. இவர்கள் இருவருக்கும் வருகிற மே 12ஆம் தேதிப் பாட்னாவில் வைத்து திருமணம் நடைபெறவுள்ளது.
இந்தக் காரணத்தினால் பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலுவிற்கு, சிறை நிர்வாகம் ஐந்து நாட்கள் பரோல் வழங்கியுள்ளது. இன்று மாலை லாலு பாட்னாவிற்கு செல்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.