Skip to main content

அமெரிக்காவில் எதிரொலித்த லக்கிம்பூர் சம்பவம்; பதிலளித்த நிர்மலா சீதாராமன்!

Published on 13/10/2021 | Edited on 13/10/2021

 

nirmala sitharaman

 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஆஷிஸ் மிஸ்ரா, விவசாயி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர்.

 

இந்த வன்முறையைக் கண்டித்து நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. மேலும், நேற்று (12.10.2021) உயிரிழந்த விவசாயிகளுக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதற்கிடையே, லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக ஆஷிஸ் மிஸ்ராவுடன் சேர்த்து இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு பேர் சரணடைய விரும்புவதாக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். மேலும் உச்சநீதிமன்றத்திலும் இந்த வன்முறை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இந்தநிலையில் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இது குறித்து கேள்வியெழுப்பட்டுள்ளது. தனது பயணத்தின் ஒரு பகுதியாக ஹார்வர்ட் கென்னடி ஸ்கூலில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்ட நிர்மலா சீதாராமனிடம், லக்கிம்பூரில் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டது குறித்து பிரதமரோ, மூத்த அமைச்சர்களோ எதுவும் கூறாது ஏன் எனவும், யாராவது இதுகுறித்து கேள்விகேட்டால் ஏன் தற்காத்துக் கொள்ளும் நடைமுறை பின்பற்றப்படுகிறது என கேள்வியெழுப்பப்பட்டது.

 

udanpirape

 

அதற்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன் கூறியதாவது; இல்லை..கண்டிப்பாக இல்லை. முற்றிலும் கண்டிக்கத்தக்க ஒரு சம்பவத்தை நீங்கள் எழுப்பியுள்ளீர்கள். மற்ற பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதுதான் எனது கவலை.

 

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற பிரச்சனைகள் நடைபெறுகின்றன. நீங்களும், டாக்டர் அமர்த்தியா சென் உள்ளிட்ட மற்றவர்களும், இந்தியாவை அறிந்தவர்களும் பாஜக சம்மந்தப்பட்டுள்ளபோது மட்டும் அந்த பிரச்சனைகளை எழுப்பாமல், பிரச்சனைகள் நடக்கும் ஒவ்வொரு முறையும் அதை எழுப்ப வேண்டும் என விரும்புகிறேன். எனது அமைச்சரவை சகாவின் மகன் அநேகமாகப் பிரச்சனையில் இருக்கக்கூடும். அவர்கள்தான் (மத்திய இணையமைச்சரின் மகன் உள்ளிட்டோர்) அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், வேறு யாரும் அதைச் செய்யவில்லை எனக் கருதப்படுகிறது. அதை நிறுவச் சட்டம் ஒரு முழுமையான விசாரணை செயல்முறையைக் கொண்டிருக்கும்.

 

இது எனது கட்சி அல்லது பிரதமரைப் பாதுகாக்கச் சொல்லவில்லை. இந்தியாவின் தற்காப்புக்காகக் கூறுகிறேன். நான் இந்தியாவிற்காகப் பேசுவேன். ஏழைகளுக்கு நீதி கிடைக்கப் பேசுவேன். நான் அதைக் கேலி செய்யமாட்டேன் . நான் கேலி செய்தேன் என்றால், "உண்மைகளைப் பேசுவோம்" எனத் தற்காப்புக்காக கூறியிருப்பேன். இதுதான் உங்களுக்கு என்னுடைய பதில். 

 

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது தி.மு.க. பரபரப்பு புகார்!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
DMK on Minister Nirmala Sitharaman Sensational complaint

பா.ஜ.க. சார்பில் கோவையில் நேற்று (18.03.2024) நடைபெற்ற பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது திறந்த வெளி வாகனத்தில் பேரணியாகச் சென்று சாலையில் இருபுறமும் உள்ள மக்களை நோக்கி கையசைத்தவாறே பேரணியில் ஈடுபட்டார். இந்த வாகனத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த பேரணியை ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று மாலை 6:45 மணிக்கு நிறைவு செய்தார். இந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தை விதி மீறலாக கலை நிகழ்ச்சிக்கான மேடையில் பள்ளி மாணவர்களும் இருந்தது குறித்து கண்டனங்கள் எழுந்தன.

தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை இருக்கும் நிலையில், பிரதமர் மோடி கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகளிலேயே பள்ளி மாணவர்கள் பயன்படுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. பள்ளி மாணவர்கள் பங்கேற்ற அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கிராந்தி குமார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதே சமயம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.வினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் பிரதமரின் கோவை வாகனப் பேரணியில் 12 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றது தொடர்பாக பா.ஜ.க.வுக்கு எதிராக இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார் அளித்துள்ளது. மேலும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியதற்காகவும் நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கோயில்களை தி.மு.க. அழிப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவதூறு பரப்பி, வெறுப்பைத் தூண்டும் விதமாகப் பேசுகிறார். உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறி தி.மு.க.வின் மீது அவதூறுகளைப் பரப்பியதாக நிர்மலா சீதாராமன் மீது தேர்தல் ஆணையத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி புகார் அளித்துள்ளார்.

DMK on Minister Nirmala Sitharaman Sensational complaint

அந்தப் புகாரில், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 16.03.2024 அன்று மாலை 05.30 மணிக்கு யூடியூப் சேனல் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் ஒன்றில் பொதுமக்களிடம் உரையாற்றினார். அந்த உரை சம்பந்தப்பட்ட யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அப்போது நிர்மலா சீதாராமன் தனது உரையின் போது திராவிட முன்னேற்றக் கழகம் பற்றிய உண்மைகளைத் திரித்து விமர்சித்தார். அதாவது, ‘நமது கோயிலையே அழிக்கக் கூடிய, நமது கோயிலையே சுரண்டித் தின்னக் கூடிய, நமது மதத்தையே அழிப்பேன் என்று சொல்லக்கூடிய கட்சிக்கெல்லாம் ஏன் ஓட்டு போடுறீங்க’ எனப் பேசியுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

“என்னை அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால்...” - எச்சரிக்கும் டொனால்ட் டிரம்ப்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
warns Donald Trump If I'm not elected president

குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட்  ட்ரம்ப், அமெரிக்க அதிபராக கடந்த 2016 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. 

இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் எனக் கடந்த சில தினங்களுக்கு முன் கூறப்பட்டு வந்தது. இதற்கான ஆதரவுகளையும் டிரம்ப் தீவிரமாகத் திரட்டி வருகிறார்.

இதற்கிடையே, குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக நிற்கப்போவது யார் என்பதற்கான தேர்தல், அந்த கட்சி சார்பில் நடத்தப்பட்டது. அதில், ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்தல் நடத்தப்பட்டு அதில் அதிக வாக்கு செல்வாக்கு பெரும் நபர் தான், அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. அந்த வகையில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து, அந்த கட்சியைச் சேர்ந்தவரான நிக்கி ஹாலே போட்டியிட்டார். இவர்கள் இருவருக்கும் கடும் போட்டி நிலவி வந்தது. 

இதனையடுத்து, கடந்த 3 ஆம் தேதியும் 5 ஆம் தேதியும் வேட்பாளர் தேர்தல் நடைபெற்றது. ஆனால், தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே, நிக்கி ஹாலே போட்டியில் இருந்து விலகினார். இதன் மூலம் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் நியமிக்கப்பட்டார். அதேபோல், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் அதிபர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இருவரும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவின் ஓஹியோவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய டொனால்ட் டிரம்ப், “என்னை அதிபராக தேர்வு செய்யாவிட்டால் அமெரிக்கா மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும். மெக்சிகோவில் கார்களை உருவாக்கி அமெரிக்கர்களுக்கு விற்கும் சீன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நான் அதிபரானால், கார்களை அமெரிக்காவில் விற்க முடியாது. இந்த முறை நான் அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால், ஜோ பைடனால் நாட்டில் வன்முறை வெடிக்கும். இதனால், மக்கள் என்னை ஆதரிக்க வேண்டும்” என்று கூறினார்.